புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி, எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாத நிலை தெளிவாகத் தெரிகிறது என்று விமர்சித்தார். அவர் கூறியதாவது:
ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால், டி.டி.வி. தினகரன் அல்லது ஓ.பி.எஸ். (ஓ. பன்னீர்செல்வம்) ஆகியோரை தமது கூட்டணியில் சேர்த்துக் கொள்வதாக அவர் வெளிப்படையாக கூறியுள்ளாரா? இதிலிருந்தே அவர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை என்பது தெளிவாகிறது என்றார்.
மேலும், பாஜக தலைவர் பியூஷ் கோயல் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்காக தமிழ்நாட்டுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டின் அரசியல் சூழலும், இங்குள்ள தட்பவெட்ப நிலையும் அவருக்கு தெரியாது. எனவே, அவர் நினைப்பது போல அரசியல் மாற்றம் தமிழ்நாட்டில் நிச்சயமாக நடைபெறாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையின் போது நலத்திட்ட உதவிகள் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கியிருக்கலாம், அல்லது வழங்காமல் இருந்திருக்கலாம். அதைப்பற்றி இப்போது எதையும் தெரிவிக்க மாட்டோம். தற்போதைக்கு அது ரகசியமாகவே இருக்கும். உரிய நேரத்தில் திடீரென அறிவிக்கப்படும் என்று கூறினார்.