ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பேசினார். இந்தியாவின் விசாரணை அமைப்புகள் அரசியல் ஆயுதங்களாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
வெளிநாட்டு பயணங்களின் போது இந்திய அரசை விமர்சிப்பது ராகுல் காந்தியின் வழக்கமாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் நிலையில், இந்த முறை ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள ஹெர்டி பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் ராகுல் தெரிவித்ததாவது,"மத்திய அரசு, விசாரணை மற்றும் புலனாய்வு அமைப்புகளை ஆயுதங்களாக பயன்படுத்துகிறது. அவற்றை கைப்பற்றி, அரசியல் எதிரிகளை மிரட்டும் கருவிகளாக மாற்றியுள்ளது” என்றார்.
மேலும் அவர், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகள் ஆளும் பாஜக கட்சியினருக்கு எதிராக எந்த வழக்குகளையும் பதிவு செய்வதில்லை என்றும், எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார்.
“பாஜகவின் பணவலிமையையும், எதிர்க்கட்சிகளின் நிலைமையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஜனநாயக அமைப்புகள் மீது முற்றிலும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கு எதிரான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.தொடர்ந்து பேசிய ராகுல்,“நாங்கள் பாஜகவுக்கு எதிராக மட்டுமே போராடவில்லை.
இந்தியாவின் விசாரணை அமைப்புகளை அவர்கள் கைப்பற்றுவதை எதிர்த்தே எங்கள் போராட்டம்” என்றார்.இண்டி கூட்டணி குறித்து விளக்கம் அளித்த அவர், அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆர்எஸ்எஸ் சிந்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை என்றும், உள்ளாட்சி தேர்தல்களில் சில கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டாலும், பார்லிமென்டில் ஜனநாயகத்தை காக்க ஒன்றுபட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
சித்தாந்த மோதல் குறித்து பேசிய ராகுல்,மத்திய அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொலைநோக்குப் பார்வையை இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஏற்கவில்லை என்றார். பிரதமர் மோடியை ஆதரிப்பவர்கள் இருந்தாலும், அவரது சிந்தனையும், அவர் கற்பனை செய்கிற இந்தியாவும் அனைவருக்கும் ஏற்றதாக இல்லை எனவும் தெரிவித்தார்.
“அந்த தொலைநோக்குப் பார்வை தோல்வியடையும். அதில் மிகப்பெரிய குறைபாடுகள் உள்ளன. அது இந்திய சமூகத்தில் பதற்றங்களை உருவாக்கி, மக்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் அபாயம் உள்ளது. இதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இது இந்தியாவில் இரண்டு மாறுபட்ட தொலைநோக்குப் பார்வைகளுக்கிடையிலான மோதல்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.