சேலம் மாநகரில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் அதிவேகமாக வந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்று, சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோதி கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், ஒரு குறுகிய சாலையில் அதிவேகமாக வந்த ஆட்டோ, வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பெண் மீது பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் ஆட்டோ இரண்டு முறை தலைகீழாகக் கவிழ்ந்து சாலையில் சறுக்கிச் சென்றது. சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், காயமடைந்த பெண்ணை மீட்டு அவருக்கு முதலுதவி அளித்தனர். ஆட்டோவில் பயணம் செய்த பயணிகளும் இச்சம்பவத்தில் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று, டிராக்டர் டிராலியை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து நான்கு முறை உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது புழுதிப் படலம் கிளம்பியதுடன் கார் பலமுறை காற்றில் பறந்து கவிழ்ந்த காட்சி பார்ப்பவர்களை உறைய வைத்தது.
ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் அதிக வேகமே இந்த விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பு விதிகளுக்குப் புறம்பாக அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் இதுபோன்ற விபத்துகள் தொடர்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.