MD Abu Sufian Jewel/NurPhoto via Getty மாணவர் தலைவர் உஸ்மான் ஹாதியின் மரணத்தைத் தொடர்ந்து வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது, இது பல பகுதிகளில் போராட்டங்களைத் தூண்டியது.
வங்கதேசத்தின் 'இன்குலாப் மஞ்ச்' அமைப்பைச் சேர்ந்த மாணவர் தலைவர் உஸ்மான் ஹாதியின் கொலையைத் தொடர்ந்து, தற்போது அந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு தலைவரும் பொது இடத்தில் வைத்துச் சுடப்பட்டுள்ளார்.
இந்நிலையில், செய்தி முகமைகளின்படி, இந்து இளைஞர் திபு சந்திர தாஸ் படுகொலை மற்றும் வங்கதேசத்தில் 'இந்துக்களுக்கு எதிராக வன்முறை' நடப்பதாக கூறி, டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு வெளியே விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பிற இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே வங்கதேசத்திற்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் கோசின், "இந்தியாவுடனான பதற்றத்தை வங்கதேசம் எவ்வளவு சீக்கிரம் குறைக்கிறதோ, அவ்வளவு நல்லது" என தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் உள்ள தனது தூதரகத்தில் விசா சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்ததைத் தொடர்ந்து, அகர்தலா மற்றும் சிலிகுரியில் உள்ள விசா விண்ணப்ப மையங்களையும் வங்கதேசம் மூடியுள்ளது.
தவிர, டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என்று வங்கதேசத்தில் உள்ள ஜெர்மன் தூதரகம் தெரிவித்துள்ளது.
டாக்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் டிசம்பர் 25-ஆம் தேதிக்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தின் வெளியே போராட்டம் நடத்திய இந்து அமைப்புகள்
ANI பெருமளவில் கூடியுள்ள போராட்டக்காரர்களின் கூட்டத்தை வெளிப்படுத்தும் பல வீடியோக்களை செய்தி முகமைகள் வெளியிட்டுள்ளன.
பிடிஐ மற்றும் ஏஎன்ஐ செய்தி முகமைகளின்படி, இந்து இளைஞர் திபு சந்திர தாஸ் படுகொலை மற்றும் வங்கதேசத்தில் 'இந்துக்களுக்கு எதிராக வன்முறை' நடப்பதாக கூறி, டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு வெளியே விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பிற இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பெருமளவில் போராட்டக்காரர்கள் கூடியிருப்பதைக் காட்டும் பல வீடியோக்களை செய்தி முகமைகள் வெளியிட்டுள்ளன.
பிடிஐ செய்தியின்படி, போராட்டங்களின் காரணமாக வங்கதேச தூதரகத்திற்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன, மேலும் கடுமையான பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏஎன்ஐ வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், போலீஸ் தடுப்புகளுக்கு அருகே போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் நடப்பதைக் காண முடிகிறது.
மற்றொரு வீடியோவில், ஏராளமான போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்புவதைக் காண முடிகிறது.
வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் டிசம்பர் 18-ஆம் தேதி, மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இந்து இளைஞர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
அந்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் மரத்தில் கட்டப்பட்டு தீவைக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் திபு சந்திர தாஸ் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
மற்றொரு தலைவர் மீது துப்பாக்கி சூடுவங்கதேச நாளிதழான 'டாக்கா ட்ரிப்யூன்' வழங்கியுள்ள செய்தியின்படி, நேஷனல் சிட்டிசன் பார்ட்டி அமைப்பின் குல்னா பிரிவுத் தலைவரும், 'ஷ்ராமிக் சக்தி' அமைப்பின் மத்திய ஒருங்கிணைப்பாளருமான மொத்தலெப் சிக்தர், திங்கள்கிழமை காலை 11:45 மணியளவில் குல்னாவின் சோனாடங்கா பகுதியில் வைத்துச் சுடப்பட்டார்.
மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், சிக்தர் குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனாடங்கா மாடல் காவல் நிலையத்தின் விசாரணை அதிகாரி அனிமேஷ் மண்டல் கூறுகையில், "அடையாளம் தெரியாத நபர்களால் சிக்தர் சுடப்பட்டார். உள்ளூர் மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்," என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, கடந்த டிசம்பர் 12ஆம் தேதி டாக்காவில் உள்ள மசூதியிலிருந்து வெளியே வந்த உஸ்மான் ஹாதியை மர்ம நபர்கள் சுட்டனர். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, டிசம்பர் 15-ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18-ஆம் தேதி உஸ்மான் ஹாதி உயிரிழந்தார். அவரது மரணம் வங்கதேசம் முழுவதும் வன்முறைப் போராட்டங்களைத் தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
விசா சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ள வங்கதேசம்
Netai De அகர்தலாவில் உள்ள வங்கதேச விசா மற்றும் தூதரக சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
இதனிடையே, டெல்லியில் உள்ள தனது தூதரகத்தில் விசா சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்ததைத் தொடர்ந்து, அகர்தலா மற்றும் சிலிகுரியில் உள்ள விசா விண்ணப்ப மையங்களையும் வங்கதேசம் மூடியுள்ளது.
பிபிசி வங்கமொழி சேவையின்படி, திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள வங்கதேச விசா மற்றும் தூதரக சேவைகள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் அமைந்துள்ள வங்கதேச விசா விண்ணப்ப மையத்தின் செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
வங்கதேசத்தில் இந்து இளைஞர் திபு சந்திர தாஸ் உயிரிழந்ததையடுத்து, கடந்த சில நாட்களாக அகர்தலாவில் சில உள்ளூர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
ஆனால், கொல்கத்தாவில் உள்ள வங்கதேச விசா அலுவலகம் இன்னும் திறந்திருப்பதாக, தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிபிசி வங்கமொழி சேவை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, டெல்லியில் உள்ள தனது தூதரகத்தில் விசா சேவைகளை வங்கதேசம் தற்காலிகமாக நிறுத்தியது. தூதரகத்தின் வாயிலில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பில், மறு உத்தரவு வரும் வரை இந்தச் சேவைகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தி டெய்லி ஸ்டார் நாளிதழ் ஆசிரியரின் கருத்து
STR/AFP via Getty தங்கள் உயிரைப் பாதுகாக்குமாறு கோர பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தி டெய்லி ஸ்டார் அலுவலகத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அதன் ஆசிரியர் மஹ்ஃபூஸ் அனம் கூறியுள்ளார்.
தி டெய்லி ஸ்டார் அலுவலகத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அதன் ஆசிரியர் மஹ்ஃபூஸ் அனம் பேசுகையில், கருத்து சுதந்திரத்திற்கான கோரிக்கையை விட தற்போது பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த கவலையே மேலோங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
மாணவர் தலைவர் உஸ்மான் ஹாதி படுகொலை செய்யப்பட்ட பிறகு வங்கதேசத்தில் வெடித்த வன்முறையில், 'தி டெய்லி ஸ்டார்' மற்றும் 'புரதோம் ஆலோ' ஆகிய இரண்டு ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் தீவைக்கப்பட்டும், அடித்து நொறுக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், திங்கள்கிழமை அன்று டாக்காவில் உள்ள சோனார்கான் ஹோட்டலில் 'கும்பல் வன்முறையின் கீழ் வங்கதேசம்' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
புரதோம் ஆலோ செய்தியின்படி, தி டெய்லி ஸ்டார் அலுவலகம் மீதான தாக்குதல் குறித்துப் பேசிய மஹ்ஃபூஸ் அனம், குறைந்தது 26-27 பத்திரிகையாளர்கள் மாடியில் சிக்கிக் கொண்டதாகவும், தீயணைப்புப் படையினர் அங்கு வருவதைத் தடுத்ததாகவும் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "டெய்லி ஸ்டார் மற்றும் புரதோம் ஆலோ பத்திரிகையாளர்களைக் கண்டுபிடித்து அவர்கள் வீடுகளிலேயே வைத்துக் கொல்ல வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிடுவதை நாங்கள் பார்த்தோம்," என்றார்.
இந்தச் சம்பவத்தை "கொடூரமானது" என்று விவரித்த மஹ்ஃபூஸ் அனம், இது பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு என்ற விவகாரத்தை முன்னிறுத்தியுள்ளது என்று கூறினார்.
மேலும், தங்களது உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, செய்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தூதரகம் மூடப்பட்டிருக்கும் - ஜெர்மன் தூதரகம்
Getty Images டிசம்பர் 25-ம் தேதி தொடர்பாக மேற்கத்திய தூதரகங்களில் பரபரப்பான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என்று வங்கதேசத்தில் உள்ள ஜெர்மன் தூதரகம் தெரிவித்துள்ளது.
டாக்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் டிசம்பர் 25-ஆம் தேதிக்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. ஆனால், டிசம்பர் 24-25 ஆகிய தேதிகளில் தூதரகம் மூடப்படுவதற்கான எந்தவொரு காரணத்தையும் ஜெர்மனி தூதரகம் தெரிவிக்கவில்லை.
மறுபுறம், அமெரிக்கத் தூதரகம் தனது ஆலோசனைக்கான காரணத்தை விளக்கியுள்ளது.
இதற்கு முன்னதாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், உஸ்மான் ஹாதியின் மரணத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்திருந்தன.
இத்தகையச் சூழலில், டிசம்பர் 25 அன்று வங்கதேசத்தில் என்ன நடக்கப் போகிறது, ஏன் ஜெர்மனியும் அமெரிக்காவும் இவ்வளவு விழிப்புடன் இருக்கின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.
டாக்காவில் உள்ள ஜெர்மனி தூதரகம் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில், "தூதரகம் டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும், மீண்டும் டிசம்பர் 28 முதல் செயல்பாடுகள் தொடங்கும்" என்று பதிவிட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள ஆலோசனையில், "ஊடகத் தகவல்களின்படி, வங்கதேச தேசியக் கட்சி (BNP) அதன் தற்காலிக செயல் தலைவர் தாரிக் ரஹ்மானின் வருகையைக் குறிக்கும் வகையில், டிசம்பர் 25 அன்று காலை 11:45 மணி முதல் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் முதல் குல்ஷன் வரையிலான பூர்பாச்சல் விரைவுச் சாலை மற்றும் இதர சாலைகளில் பிரமாண்ட பொதுப் பேரணியை ஒருங்கிணைத்துள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் டாக்காவுக்குள்ளும் அதைச் சுற்றியும் பயணம் செய்பவர்கள் கூடுதல் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் மற்றும் மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் பயணிகள் தங்கள் விமான டிக்கெட்டுகள் மற்றும் பயண ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும், மேலும் போலீஸ் சோதனைச்சாவடிகளில் அவற்றைக் காண்பிக்கத் தயாராக இருக்க வேண்டும்," என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸுடன் பேசினார்.
இருவரும் வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்துவரும் சம்பவங்கள் மற்றும் வரவிருக்கும் தேர்தல்கள் குறித்து விவாதித்தனர்.
அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் வங்கதேசத்திற்கான ரஷ்ய தூதர் இந்தியாவைப் பற்றி கூறியது என்ன?
X/ @RussEmbDhaka அலெக்சாண்டர் கிரிகோரிவிச், வங்கதேசத்திற்கான ரஷ்யாவின் தூதர்
வங்கதேசத்திற்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் கோசின், அண்டை நாடான இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
திங்கள்கிழமை டாக்காவில் செய்தியாளர்களுடனான தனது முதல் உரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "இந்தியாவுடனான பதற்றத்தை வங்கதேசம் எவ்வளவு சீக்கிரம் குறைக்கிறதோ, அவ்வளவு நல்லது" என்றார்.
டாக்காவில் உள்ள ரஷ்யத் தூதரகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
ஒரு கேள்விக்குப் பதிலளித்த ரஷ்யத் தூதர், பதற்றத்தைக் குறைப்பது இரு நாடுகளுக்கும், ஒட்டுமொத்த தெற்காசியாவுக்கும் முக்கியமானது என்று கூறினார்.
மேலும், 1971-ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.
ரஷ்யத் தூதர் கூறுகையில், "வங்கதேசம் 1971-ல் முதன்மையாக இந்தியாவின் உதவியுடன் சுதந்திரம் பெற்றது. ரஷ்யாவும் அதற்கு ஆதரவளித்தது," என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ரஷ்யா தலையிடவில்லை என்றும், ஆனால் பதற்றத்தை மேலும் அதிகரிக்காத ஒரு தீர்வைக் காண்பது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் உறுதியின் அடிப்படையில் உறவுகள் அமைய வேண்டும் என்று ரஷ்ய தூதர் கூறினார்.
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து ரஷ்யா இதுவரை மௌனம் காத்து வந்த நிலையில், ரஷ்யத் தூதரின் இந்தக் கருத்து மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தில் உள்ள மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் இளம் தலைவர் உஸ்மான் ஹாதியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் வேளையில், ரஷ்யா வங்கதேச சுதந்திரத்தில் இந்தியாவின் பங்கை நினைவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு