“ஏங்க எங்க கூமாபட்டிக்கு வாங்க” என்ற ஒரே டயலாக்கில் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானவர் கூமாபட்டியைச் சேர்ந்த தங்கபாண்டி. சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் தனக்கும், தனது ஊருக்கும் அடையாளம் உருவாக்கிய அவர், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் ஈர்த்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியில் உள்ள அணையில் குளித்தபோது, “தண்ணி சர்பத் மாதிரி இனிக்கும்” என்று பேசிய வீடியோ தான் தங்கபாண்டியை வைரலாக்கியது. தொடர்ந்து தனது ஊரை வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு, கூமாபட்டிதான் டாப் எனக் கூறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இது எதேச்சையாக நடந்தது அல்ல; மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு திட்டமிட்டு செய்த முயற்சியே என அவர் பேட்டிகளில் தெரிவித்திருந்ததும் கவனம் பெற்றது.
சோஷியல் மீடியா புகழைத் தொடர்ந்து, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு தங்கபாண்டிக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை சாந்தினியுடன் இணைந்து நடனம் ஆடி, தனது குறும்புத்தனமான செயல்களால் ரசிகர்களை கவர்ந்தார். இறுதியில் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் தேர்வாகி, அவரது பிரபலத்தை மேலும் உயர்த்தினார்.
இந்த நிலையில், ‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியின் செட்டில் பதிவான ஒரு வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், சாந்தினி ஜவ்வு மிட்டாயால் செய்யப்பட்ட வாட்சை கையில் கட்டிக் கொண்டிருக்கும் போது, அருகில் நின்ற தங்கபாண்டி அந்த மிட்டாய் வாட்சை சாப்பிட முயல்வது போல நடிக்கிறார். அதை கவனித்த சாந்தினி உடனே கையை எடுத்து விட, தங்கபாண்டி ஏமாற்றமடைந்த காட்சி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “சாந்தினி பொண்ணு கிட்ட தங்கபாண்டி சிக்கி படாத பாடு படுறாரே” என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இவ்வாறு, கூமாபட்டி தங்கபாண்டி மீண்டும் ஒருமுறை தனது குறும்பு வீடியோவால் சமூக வலைதளங்களில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.