நடிகர் அஜித் குமாரை வெறும் நடிகராக மட்டும் பார்க்க முடியாது. சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்திலேயே பைக் ரேஸ், கார் ரேஸ், பைக் ரைடிங், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல துறைகளில் தீவிரமாக ஈடுபட்டு, அவற்றை முறையாக பயிற்சி பெற்றவராக அவர் வளர்ந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக அஜித் குமாரின் கார் ரேஸ் பயணம் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில், அவரது கார் ரேஸ் அனுபவங்களை பதிவு செய்த ஆவணப்படம் உருவாகி வருகிறது என்ற தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அந்த ஆவணப்படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அஜித் குமார் தொடங்கிய “அஜித்குமார் ரேஸிங்” அணி கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டு, இந்த ஆண்டு தொடக்கம் முதலே சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இந்த பயணத்தை ஆவணப்படமாக பதிவு செய்யும் பணியில் இயக்குநர்கள் ஏ.எல். விஜய் மற்றும் சிறுத்தை சிவா கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
சுமார் ஒரு நிமிடம் 57 விநாடிகள் ஓடும் இந்த டிரைலரில், ரேஸிங் அணியின் டிரெஸ்ஸிங் ரூம் உரையாடல்கள், பயிற்சி காட்சிகள், போட்டிகளில் வெற்றி பெற்ற தருணங்களில் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கார் ரேஸிங் குறித்து அஜித் கூறும் கருத்து ரசிகர்களை மிகவும் ஈர்த்துள்ளது.
அதில், “சினிமாவில் ஒரு டேக் சரியாக வரவில்லை என்றால் ரீடேக் எடுக்கலாம். ஆனால் ரேஸிங்கில் ரீ என்ற வாய்ப்பே இல்லை. ஒரு சிறிய தவறு கூட காரை சேதப்படுத்தலாம், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம், குடும்பத்தினரையும் நண்பர்களையும் துயரத்தில் ஆழ்த்தலாம், பிறரையும் காயப்படுத்தலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ள நிலையில், முழு ஆவணப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.