பிரேமலதா விஜயகாந்த் அதிரடி : ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை..!
Top Tamil News December 27, 2025 02:48 PM

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"எங்கள் கட்சிக்கு ராஜ்ய சபா (மாநிலங்களவை) உறுப்பினர் பதவி வழங்க உறுதி அளித்தால் மட்டுமே கூட்டணி குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிகவை வலுப்படுத்த பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். நாடாளுமன்றத்தில் கட்சியின் குரலை ஒலிக்கச் செய்ய ஒரு ராஜ்ய சபா சீட் என்பது தேமுதிகவிற்கு நீண்ட காலத் தேவையாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் சில கூட்டணிகளில் இதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டும், அது நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி தேமுதிக தொண்டர்களிடையே உள்ளது.

"தேமுதிகவின் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். கௌரவமான இடங்கள் மற்றும் ராஜ்ய சபா சீட் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தேர்தல் கூட்டணி அமையும்" என அவர் பேசியுள்ளது, தற்போது தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகளுக்கு ஒரு பெரும் சவாலாக இது அமைந்துள்ளது.

இதனிடையே திமுக தரப்பில் இருந்து தேமுதிக விடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அப்போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும், அத்துடன் மரியாதையான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் திமுக தலைமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முக்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.