ராஜஸ்தான்: `திருமணமான பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை' - கிராமப் பஞ்சாயத்தில் முடிவு!
Vikatan December 27, 2025 04:48 PM

ராஜஸ்தான் மாநிலத்தில் 15 கிராமங்களில் இளம்பெண்கள் மற்றும் மருமகள்கள் கேமரா இருக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள ஜலோரா மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த செளதரி சமுதாய தலைவர்கள் கூட்டம் நடந்தது. காஜிபூர் என்ற கிராமத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இறுதியில் இளம்பெண்கள் மற்றும் மருமகள்கள் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை விதிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த உத்தரவால் பாதிக்கப்படும் பெண்கள் சாதாரண பட்டன் போன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்தலாம். ஆனால் அவர்கள் திருமணம், பொது நிகழ்ச்சிகள் மற்றும் பக்கத்து வீட்டிற்குச் செல்லும்போது ஸ்மார்ட் போன்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

15 கிராமங்களின் தலைவர் சுஜ்னாராம் செளதரி இந்த தீர்மானத்தை பின்னர் அறிவித்தார். இத்திட்டத்திற்கு ஒரு தரப்பில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதற்கு விளக்கம் அளித்துள்ள சுஜ்னாராம், ``மொபைல் போன்களால் கண்கள் பாதிக்கப்படுகிறது. அதோடு பெண்கள் எப்போதும் மொபைல் போனில் மூழ்கி இருப்பதால் அவர்களால் அன்றாட வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை. எனவேதான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். இந்த தடை ஜனவரி 26ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.