“காசே இல்ல எதுக்கு சிசிடிவி!”.. திருட வந்த வீட்டில் ஏமாந்து நின்ற திருடன்.. கடிதத்தைப் பார்த்த அதிருந்து போன குடும்பம்.. நெல்லையில் பரபரப்பு..!!!
SeithiSolai Tamil December 27, 2025 04:48 PM

திருநெல்வேலி மாவட்டம் பாளையப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த திருடன், அங்கே இருந்த சிசிடிவி (CCTV) கேமராவைப் பார்த்ததும் செம குஷியாகிவிட்டான். “இந்த வீட்டில் சிசிடிவி கேமரா எல்லாம் இருக்கிறது என்றால், உள்ளே நகை, பணம் கொட்டிக் கிடக்கும்” என நினைத்து வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளான்.

ஆனால், தேடித் தேடிப் பார்த்தும் அவனுக்கு வெறும் 2,000 ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் கடும் எரிச்சலடைந்த அந்தத் திருடன், போற போக்கில் வீட்டு உரிமையாளருக்கு ஒரு நக்கலான கடிதத்தை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளான்.

அந்தக் கடிதத்தில், “வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, அப்புறம் எதுக்கு சிசிடிவி கேமரா? அடுத்த முறை திருட வரும்போது கொஞ்சம் பணமாவது எடுத்து வையுங்கள், திருட வருபவர்கள் ஏமாறக் கூடாது” எனத் திருடன் தனது மனக்குமுறலைக் கொட்டியுள்ளான்.

அத்தோடு நிறுத்தாமல், தான் பிடிபடாமல் இருக்க சிசிடிவியின் ஹார்டு டிஸ்க்கையும் கழட்டித் தூக்கிச் சென்றுவிட்டான். காலையில் எழுந்து பார்த்த வீட்டு உரிமையாளர்கள், திருடு போனதை விட திருடன் எழுதி வைத்திருந்த கடிதத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ளனர். இந்த வினோதத் திருட்டுச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் ‘டார்க் காமெடி’யாக மாறி வைரலாகி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.