நேபாள வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த 2025-ஆம் ஆண்டு, அந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பையே மாற்றியமைத்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளாகக் கனன்று கொண்டிருந்த மக்களின் அதிருப்தி, செப்டம்பர் மாதத்தில் பெரும் புரட்சியாக வெடித்தது. பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு மீது சுமத்தப்பட்ட ஊழல் புகார்கள் மற்றும் நிலவிய பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் இளைஞர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
குறிப்பாக, உயர்மட்ட அரசியல் தலைவர்களின் வாரிசுகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவியது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல அமைந்தது. இந்தச் சூழலில், செப்டம்பர் 4-ஆம் தேதி கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு அரசு தடை விதித்ததே, நாடு தழுவிய போராட்டத்திற்கு உடனடி காரணியாக மாறியது.
செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நேபாளத்தின் வீதிகள் போர்க்களமாகக் காட்சியளித்தன. பாராளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்ற முக்கிய அரசு கட்டிடங்கள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன. பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் சுமார் 76 பேர் உயிரிழந்தனர்.
போராட்டத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி நாட்டின் முதல் பெண் பிரதமராக இடைக்கால அரசுப் பொறுப்பை ஏற்றார். டிஸ்கார்ட் போன்ற நவீனத் தொழில்நுட்பத் தளங்கள் மூலம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் இவரது தேர்வு அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய பொதுத்தேர்தல் 2026 மார்ச் 5 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் ஜென்-சி என்று அழைக்கப்படும் இளம் தலைமுறையினரின் போராட்டங்கள் உலகெங்கும் எதிரொலித்தன. மடகாஸ்கரில் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டைக் கண்டித்தும், இந்தோனேசியாவில் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட கூடுதல் சலுகைகளை எதிர்த்தும் இளைஞர்கள் வீதியில் இறங்கினர்.
மொராக்கோவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காகக் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கிய அதேவேளையில் கல்வி மற்றும் சுகாதாரம் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து மாபெரும் புரட்சி வெடித்தது. கென்யாவில் வரி உயர்வு மற்றும் காவல்துறையின் அராஜகத்திற்கு எதிராகவும், பிலிப்பைன்ஸில் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் நடந்த ஊழலுக்கு எதிராகவும் இளைஞர்கள் திரண்டனர்.
மெக்சிகோ மற்றும் பெரு போன்ற நாடுகளிலும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராகப் புதிய அரசியல் மாற்றத்தை இளைஞர்கள் கோரினர்.
2025-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தப் போராட்டங்கள், வெறும் சமூக வலைதளங்களில் மட்டும் கருத்துகளைப் பதிவிடும் தலைமுறையாக இல்லாமல், களத்தில் இறங்கி ஆட்சியையே மாற்றும் வலிமை தங்களுக்கு இருப்பதை உலகிற்கு நிரூபித்துள்ளன. 2026-ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெறவுள்ள தேர்தல், மீண்டும் பழைய அரசியல்வாதிகளின் கைகளுக்குச் செல்லுமா அல்லது புதிய இளம் தலைமுறைத் தலைவர்களை உருவாக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிரான இந்த உலகளாவிய ஜென்-சி புரட்சி, ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாவதற்கான ஆரம்பமாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.