ரயில்வே அமைச்சகத்தைக் குறிப்பிட்டுப் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் ரயில்வே காவல்துறையினருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் (NCJ) ரயில் நிலையத்தில், அந்தச் சுற்றுலாப் பயணி அங்கிருந்த பெயர் பலகையுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதைக் கண்ட காவல்துறையினர், அவரை அதிகாரிகளிடம் சென்று பேசுமாறு கூறி தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ரயில் நிலையத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும், பிரிட்டிஷ் காலத்து பழைய விதிகளைக் காட்டி எங்களைப் போன்ற சுற்றுலாப் பயணிகளை ஏன் அலைக்கழிக்கிறீர்கள் என்றும் அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்புகிறார். ஆனால், காவல்துறையினர் அவரது வாதத்தை ஏற்காமல் தொடர்ந்து அவரை அதிகாரிகளிடம் செல்லுமாறு வற்புறுத்துகின்றனர். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதைப் பார்க்கும் பலரும், “ரயில் நிலையங்களில் அழகான நினைவுகளைப் படம் பிடிப்பது எப்படித் தப்பாகும்?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற கெடுபிடிகள் சுற்றுலாவைப் பாதிக்கும் என்றும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.