தமிழகத்தில் கடுமையான பனிபொழிவு நிலவி வரும் நிலையில், இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக, இன்று (டிசம்பர் 28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : மது அருந்தியதை தட்டிக் கேட்ட மனைவி…ஆத்திரமடைந்த கணவன்…விபரீதத்தில் முடிந்த தகராறு!
நாளை மற்றும் நாளை மறுநாள் நிலவரம்:டிச.29ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிச.30ம் தேதி தென்கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி நிலவரம்:தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் டிசம்பர் 31 மற்றும் 2026 ஜனவரி 1ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2026 ஜனவரி 2ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-3* செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:இன்றும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க : பணம் பங்கு பிரிப்பதில் தகராறு…பாஜக நிர்வாகி வீடு சூறை. சொந்த கட்சியினர் உள்பட 5 பேர் கைது!
சென்னை வானிலை நிலவரம்:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.