சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சுமார் 1,000 மெட்ரிக் டன் தங்கம் இருப்புள்ள உலகின் மிகப்பெரிய தங்க வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு டன் பாறையில் 8 கிராம் தங்கம் இருந்தாலே அது உயர்தரம் எனக் கருதப்படும் நிலையில், இங்கு ஒரு டன் பாறையில் 138 கிராம் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்தத் தங்கம் பூமிக்கு அடியில் 2 முதல் 3 கி.மீ. ஆழத்தில் இருப்பதால், அதை வெட்டி எடுப்பது மிகவும் கடினமான மற்றும் அதிக செலவு பிடிக்கும் வேலையாகும்.
நிபுணர்களின் கருத்துப்படி, இந்தத் தங்கத்தை முழுமையாக வெட்டி எடுத்து சந்தைக்குக் கொண்டு வர இன்னும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகும். மேலும், சீனா ஆண்டுக்கு 30 டன் தங்கம் எடுத்தாலும், அது உலகத் தேவையில் வெறும் 1 சதவீதத்திற்கும் குறைவுதான்.
சீனா இந்தத் தங்கத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யாமல், தனது நாட்டின் கரன்சி மதிப்பை உயர்த்தவே சேமித்து வைக்கும். எனவே, சீனாவின் இந்த கண்டுபிடிப்பால் உலக அளவில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும், மக்கள் தங்கத்தை தொடர்ந்து சேமிப்பதே நல்லது என்றும் பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.