தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற கலைஞராகவும், ஏழை எளிய மக்களின் 'கருப்பு எம்.ஜி.ஆர்' ஆகவும் போற்றப்பட்ட தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்" என தெரிவித்துள்ளார். அரசியல் கடந்து விஜயகாந்துடன் தனக்கிருந்த தனிப்பட்ட நட்பையும், அவரது உதவும் குணத்தையும் முதல்வர் இப்பதவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். உடன் பிரேமலதா விஜயகாந்த் இருந்தார்.
விஜயகாந்தின் மறைவு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், அவர் மக்கள் மீது காட்டிய அக்கறையும், அரசியல் களத்தில் அவர் விதைத்த மாற்றங்களும் இன்றும் தமிழக மக்களால் பேசப்பட்டு வருகின்றன. நினைவிடத்தில் திரண்ட தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், தங்களின் 'கேப்டனுக்கு' கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
Legacy of the Captain: CM Stalin and EPS Pay Tribute on Vijayakanth's Second Anniversary
விஜயகாந்த் நினைவு நாள், கேப்டன் விஜயகாந்த், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தேமுதிக, அரசியல் மரியாதை, கேப்டன் நினைவிடம்.
Edited by Siva