தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அடிமட்ட அளவில் கட்சியைப் பலப்படுத்துவது மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட உள்ளது. புத்தாண்டிற்கு முன்னதாக நடைபெறும் இந்தக் கூட்டம் அதிமுக தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.