சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலை அரங்கத்தில், தமிழ்நாடு இயல்–இசை–நாடக மன்றம் சார்பில் நேற்று நடைபெற்ற நாடக விழா கலை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த விழாவில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கலை நிகழ்ச்சிகளை ரசித்தார்.
அந்த விழாவில் பேசிய கனிமொழி எம்.பி.,“அறம் என்ற சொல்லை நாம் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. இந்த காலத்திலும் ‘அறம்’ என்ற பெயரில் பலர் நம்மை வழி தவறச் செய்ய முயற்சிக்கிறார்கள். அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, உண்மையான அறம் என்றால் அது மனிதநேயம்தான்,” என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர், “தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் ஆகியோர் பேசிய அறமும் இதுவே. மனிதனை நேசிப்பதே அறம். இந்த நாடகத்தின் இறுதிக் காட்சியில் மணிமேகலை பேசும் ஒரு வரி மிக அழுத்தமாக கேள்வி எழுப்புகிறது.
அது,"என் வாழ்க்கையை தீர்மானிக்க எனக்கு உரிமை இல்லை’ என்று ஒரு பெண் எப்படி சொல்ல முடியும்?இன்று அந்த உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துவிட்டால், இந்த சமூகத்தில் ஆணவக் கொலைகள் என்ற கொடுமைக்கு இடமே இருக்காது” என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன், அரசு அலுவலர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.