கர்நாடகத்தில் விற்பனை செய்யப்படும் முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுத்தன்மை இருப்பதாக பரவிய தகவலில் உண்மையில்லை என்றும், அவை நுகர்வுக்கு முற்றிலும் பாதுகாப்பானவை என்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். முன்னதாக, கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனம் ஒன்றின் முட்டைகளில் ‘நைட்ரோபியூரான்’ (Nitrofuran) என்ற ஆன்டிபயோடிக் மருந்து எச்சங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலால் பொதுமக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முட்டை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் (FSSAI) ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “அனைத்து மாதிரிகளிலும் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி முட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்” என விளக்கமளித்தார்.