மக்ரான்: குஜராத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இந்த பலூசிஸ்தான் பகுதி பாகிஸ்தானுடன் இணைந்தது ஏன்?
BBC Tamil December 29, 2025 01:48 AM
Getty Images

உறவினர்கள் இருவருக்கு இடையேயான சண்டையாக ஆரம்பித்த கதை இது. ஆரம்பத்தில் அப்பிராந்தியத்தின் செல்வாக்குமிக்க நபர்கள் இதில் ஈடுபட, பின்னர் அரசியல் சக்திகளும் இறுதியில் உலக சக்திகளும் ஈடுபட்டன.

இதுகுறித்து புகழ்பெற்ற வழக்கறிஞரும் பலூசிஸ்தான் வரலாறு குறித்த நிபுணருமான முனைவர் சலாஹுதீன் மெங்கல் கூறுகையில், கெச் மக்ரானின் (Kech Makran) ஆட்சியாளரான கலட் அரசின் (Kalat) கான் (உயரிய அரசப் பட்டம்) உறவினர்களும் காச்கி பகுதியின் நவாப் ஆகியோரும் தங்களுக்கு கான் சிறிது கருணை காட்ட வேண்டும் என்றும், காச்கி பிராந்தியத்தின் சாகுபடி நிலத்தை தங்களுக்கு வழங்குமாறும் வலியுறுத்தினர்.

தங்கள் சமஸ்தானங்களின் (state) வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருந்தது. மறுபுறம், அவர்கள் வீண்செலவு செய்ததால், தங்களுடைய செலவுகளை எதிர்கொள்ள வருமானத்தை அதிகரிக்க வேண்டியிருந்ததாகவும் கருத்து நிலவியது.

ஆனால், இந்த கோரிக்கையை மிர் அஹமது யார் கான் புறக்கணித்துவிட்டார்.

அவரை பொறுத்தவரை இந்த நிலங்கள் பழங்குடியினருக்கு சொந்தமானவை, அதனால் அதை வேறு யாருக்கும் அளிப்பதற்கு தனக்கு உரிமை இல்லை என கருதினார்.

பிரிட்டிஷ் ஆட்சியால் கட்டுப்படுத்தப்பட்ட பலூசிஸ்தானுக்கும் அதன் அண்டை பகுதிகளுக்கும் இடையேயான மோதலுக்கு வழிவகுத்த ஆரம்பகட்ட பிரச்னையாக இது இருந்தது.

மக்ரான் மற்றும் கலட் அரசுகளுக்கு இடையே பதற்றம் ஆரம்பித்ததையடுத்து, நவாப் பயூனின் தொடர் நடவடிக்கைகள் ஆரம்பமாயின.

நவாப் பயூன் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு Getty Images

வரலாற்று ஆய்வாளர் முனைவர் ஹமித் பலூச் கூற்றின்படி, மஸ்கட்டைச் சேர்ந்த அரசியல் முகவர் சர் ரூபெர்ட் என்பவர், பஹ்ரைனைச் சேர்ந்த பிரிட்டிஷ் பிரதிநிதிக்கு அனுப்பிய கடிதத்தில், இந்தப் பிரச்னையின் தொடக்கத்தைக் காணலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மஸ்கட்டின் இமாமும் (ஆட்சியாளர்) குவாடரில் (Gwadar) தங்கியிருந்த நவாப் பயூனும் பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தி வந்தனர் என்பது இந்த ரகசிய கடிதம் வாயிலாக வெளிவந்தது.

1947-ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று நவாப் பயூன் (Turbat) குவாடரை அடைந்ததாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அருகருகே இருந்த இரு கடலோர பகுதிகளை அடைவதற்கு முக்கிய போக்குவரத்தாக நீர் வழி பயணமே இருந்தது, நவாப் பயூன் இந்த பயணத்தில் தன் சகோதரர், மகன் மற்றும் தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற பல உறுப்பினர்களையும் அழைத்துச் சென்றார்.

இந்த விருந்தினர்கள் குவாடரில் உள்ள அதிகாரபூர்வ விருந்தினர் இல்லத்தில் தங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அன்றைய முதல் நாள் இரவில் அவர்களுக்கென மஸ்கட்டின் சுல்தானான சயீத் பின் தைமூர் பெருவிருந்து ஒன்றை வழங்கினார். இந்த விருந்தோம்பல் வியத்தகு வகையில் இருந்தது.

விருந்தை நவாப் ரசித்துக் கொண்டிருக்கும்போதே, குவாடரில் இருந்த பிரிட்டிஷ் முகவர், தேநீர் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.

நவாப் பயூன் வரவேற்கப்பட்ட விதம் அப்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. வரும் நாட்களில் பெரிய சம்பவம் ஒன்று நிகழப்போவதாக பரவலாக நம்பபப்பட்டது. இந்தப் பயணத்திற்கு பிறகு நவாப் பயூன் ஜிவானிக்கு சென்று அங்கிருந்து கராச்சிக்குப் பயணித்தார், அங்கு சில நாட்கள் தங்கினார். நவாப்பின் இந்த குழப்பமான பயணத்திற்கு பிறகு மற்றொரு பயணம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காச்கியின் நவாப் பயூனின் சகோதரர் மல்க் தினார். ஒருநாள் அவர் அந்த வழியாக சென்ற புகழ்பெற்ற எஸ்எஸ் பார்பிடட்டா (SS Barpita) கப்பலில் ஏறி குவாடர் பகுதியை அடைந்தார். பயூனை போல மல்க் தினாரும் அங்கு முக்கியமான நபர்களைச் சந்தித்தார், முக்கியமாக அவர் ஹிதாயத்துல்லாவை சந்தித்தார். அப்பகுதியில் பிரிட்டிஷ் முகவராக பணிசெய்து கொண்டிருந்தவர் ஹிதாயத்துல்லா.

இந்தச் சந்திப்புகள் பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. இந்தச் சந்திப்புகள் முக்கியமான பலவற்றை வெளிக்கொண்டு வந்தது. அவை ஆச்சர்யகரமானதாகவும் முக்கியத்துவம் கொண்டதாகவும் அமைந்தன.

இதிலிருந்து, காச்கியின் நவாப் பயூனுக்கும், கலட் கானுக்கும் இடையேயான உறவு மோசமடைந்ததாக தெரியவந்தது. கரன் (Kharan) மற்றும் லஸ்பிலா (Lasbila) (இவை முன்பு பலோசிஸ்தான் யூனியனின் பகுதிகளாக இருந்தன) ஆகிய சமஸ்தானங்களில் கிளர்ச்சி நடந்து, பலூசிஸ்தான் யூனியனின் தலைவராக இருந்த கலட் கானின் தலைமையை அங்கீகரிக்கவில்லை.

கரனின் நவாப், லஸ்பிலாவின் ஜாம் (தலைமை பொறுப்பு) மற்றும் நவாப் பயூன் ஆகியோர் பாகிஸ்தானுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு கலட் கானுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

மக்ரானின் வருவாயை கையாளும் ஒற்றை அதிகார மையமாக தானே இருக்க வேண்டும் என, நவாப் பயூன் வலியுறுத்தினார். இந்த வருவாய் மற்ற தலைவர்களுடன் பகிரப்படக்கூடாது என அவர் கூறினார்.

மஸ்கட்டின் சுல்தானிடம் நவாப் பயூன், "மக்ரான் மீது கலட் கான் தாக்குதல் தொடுத்து, அப்பகுதி மக்கள் இடம்பெயர நேர்ந்தால் அவர்களுக்கு குவாடரில் (அப்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதி வரவில்லை) அடைக்கலம் தந்து, அவர்களுக்கு தேவையானவற்றை செய்துதர வேண்டும்." என கோரிக்கை விடுத்தார்.

இந்த பயணத்தின்போது நவாப் பயூன் பாகிஸ்தானின் நிறுவன தலைவரை கராச்சியில் சந்தித்ததாகவும் தெரியவந்தது. இந்த சந்திப்பு, 1947-ஆம் ஆண்டு டிசம்பர் 3 அன்று நடைபெற்றது.

கலட் கான் நவாப் பயூனை தாடரில் நடக்கும் சிறப்பு ஜிர்காவில் (மோதல்/தகராறை தீர்க்கும் செயல்முறையாகும்) கலந்துகொள்ளுமாறு அழைத்தார், ஆனால் அதனை நவாப் மறுத்துவிட்டார்.

பல ஆண்டுகளாகச் செலுத்தப்பட்டு வந்த பெயரளவிலான வருவாயை குவாடருக்குச் செலுத்த மஸ்கட்டின் சுல்தான் மறுத்தபோது, நவாப் பயூன் மஸ்கட்டின் சுல்தானுக்கு ஒரு ரகசியக் கடிதத்தை அனுப்பினார்.

பாகிஸ்தான் அரசுடன் பயூனின் நெருங்கிய உறவின் தொடக்கம் Getty Images

இந்த கதையின் மற்றொரு கோணம் கராச்சியில் நடந்துகொண்டிருந்தது.

தன்னுடைய 'தி பிராப்ளம் ஆஃப் கிரேட்டர் பலூசிஸ்தான்' எனும் புத்தகத்தில் முனைவர் இனாயதுல்லா பநூச், நவாப் பயூனுடன் பாகிஸ்தான் அரசு 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உறவை ஏற்படுத்தியதாக எழுதியுள்ளார்.

நவாப் பயூனின் மகன் ஷேக் உமர் காச்கியுடனான சந்திப்புடன் இந்த உறவு தொடங்கியுள்ளது. அடுத்து வந்த நாட்களில் இந்த உறவு இன்னும் வலுவடைந்தது.

நவாப் பயூன் மற்றும் கலட் கான், மிர் அஹமது தயர் கான் ஆகியோருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் ஏற்கெனவே வெளிப்பட்டிருந்தது, ஆனால் கரன் மற்றும் லஸ்பிலா பகுதிகளின் தலைவர்கள் ஏன் கலட் கானை எதிர்த்தனர்?

மிர் கல் கான் நசீரின் 'தாரிக் பலூசிஸ்தான்' எனும் புத்தகத்தை குறிப்பிட்டு முனைவர் ஹமீது பலூச் எழுதுகையில், "லஸ்பிலா மற்றும் கரனின் கான்களுக்கு கலட் கானுடன் பழைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. மக்ரானின் வருவாயை நவாப் பயூன் உரிமைகோருவதற்கு முன்பாகவே இந்த கருத்து வேறுபாடு இருந்தது." என குறிப்பிட்டுள்ளார்.

குல் கான் நசீரின் கூற்றுப்படி, கலட்டின் நவாப்பான பயூன் கான், கலட் கானுக்கு ஏன் போட்டியாளராக மாறினார், ஏன் அதில் உறுதியாக இருந்தார் என்பதற்கு மற்ற காரணங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

அவர் எழுதுகையில், "அவர்களை தூண்டிவிடுவதில் கலட்டின் நிர்வாகத் தலைவருக்கு (prime minister) பங்கு இருந்தது. வெளிப்படையாக அவர் கலட் கானுக்கு விசுவாசமாகத் தோன்றினாலும், அவர் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்திருந்தார்." என எழுதியுள்ளார்.

"இந்த தலைவர்கள் பாகிஸ்தானுடன் இணையுமாறு கலட்டின் நிர்வாகத் தலைவரை ரகசியமாக வலியுறுத்தினர்," என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் நவாப் பயூன் நெருங்கிய உறவை பேணுவதற்கு வழிவகுத்த பின்னணி.

"நவாப் பயூன் தனக்குக் கிடைத்த முக்கியத்துவத்திற்குத் தகுதியானவர் அல்ல, மேலும் பாகிஸ்தானில் சேருவதற்குத் தேவையான போதுமான தகுதியும் அவருக்கு தனிப்பட்ட முறையில் இருக்கவில்லை." என, முனைவர் ஹமித் பலூச் எழுதியுள்ளார்.

இதற்கான காரணத்தை விளக்கிய ஹமித் பலூச், "நசீர் கானுக்கும் முன்பே கலட்டின் கட்டுப்பாட்டில் மக்ரான் ஒருபகுதியாக இருந்தது. இந்த பிராந்தியம் தும்ப், கெட்ச் மற்றும் பஞ்ச்கூர் பகுதிகளை உள்ளடக்கிய மூன்று உள்ளூர் கச்கி (Gachki) எனும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது." என்றார்.

"இந்த பகுதிகள் கலட் அரசின் பகுதியளவில் தன்னாட்சி பெற்றவையாக அங்கீகாரம் பெற்றன. மக்ரான் பகுதி முழுவதும் நவாப் பயூனின் ஆட்சி கட்டுப்பாட்டின் கீழ் வரவில்லை. அதனால் தான், மக்ரானை பாகிஸ்தானுடன் இணைப்பது தொடர்பான முடிவை தன்னிச்சையாக எடுப்பதற்கான உரிமை அவருக்கு இருக்கவில்லை."

"எனினும், பாகிஸ்தானுடன் இணைவதற்கு அவர் கோரிய போது, அவரை சுதந்திரமான ஆட்சியாளராக பாகிஸ்தான் அரசு அங்கீகரித்தது. மக்ரானின் அண்டை மாகாணங்களான தும்ப் மற்றும் பஞ்ச்கூர் ஆகியவற்றை பாகிஸ்தான் அரசு புறக்கணித்து விட்டதைப் போல தோன்றியது. பாகிஸ்தான் இதை செய்வதற்கு பின்னால் வேறொரு காரணம் இருந்தது."

நவாப் பயூனின் முடிவுக்கு மக்ரானின் மற்ற இரு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக பயூனின் சமகால நவாபான சர்தார் புலந்த் கான் காச்கி எழுதிய கடிதம் பலூசிஸ்தான் தலைமை செயலக பதிவேடுகளில் உள்ளது. அந்த கடிதத்தின் ஒரு பகுதியை தன்னுடைய புத்தகத்தில் ஹமித் பலூச் மேற்கோளிட்டுள்ளார்.

அதில், "என்னுடைய முன்னோர்கள், நான் உட்பட என்னுடைய குலத்தினர் கலட் அரசாங்கத்திற்கு நீண்ட காலமாக விசுவாசத்துடன் இருப்பதை தாழ்மையுடன் கூறுகிறேன். இப்போது சூழல்கள் மாறிவருகின்றன. நான், என்னுடைய உறவினர்கள் மற்றும் ஒட்டுமொத்த குலத்தினரும் கலட் அரசாங்கம் மற்றும் பலூச் (கலட்டின் எதிர்காலம் குறித்து) என்ன முடிவெடுக்கிறதோ, அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

"பாகிஸ்தானுடன் காச்கியின் நவாப் பயூன் இணைவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கெச் தவிர்த்து முழு மக்ரானுக்கும் தலைமையாக இருப்பதற்கு நவாப் பயூனுக்கு எந்த உரிமையும் இல்லை." என புலந்த் கான் தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை கலட் கானுக்கு அவர் 1948-ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று எழுதினார்.

நவாப் பயூனுக்கு மக்ரானின் மற்ற இரு சமஸ்தானங்களில் எழுந்த எதிர்ப்பு, அதன்பின் தொடர்ந்து நடந்த சம்பவங்களால் ஒன்றுமில்லாமல் ஆனது. கலட் பிராந்தியத்தை பாகிஸ்தானுடன் இணைத்த பின்னர் நடந்த சம்பவங்களைப் போன்றதே இவையும்.

கலட்டை சுதந்திரமானதாக மாற்றும் பிரிட்டிஷாரின் யோசனையை நிராகரித்த காங்கிரஸ் Getty Images

சுதந்திர போராட்ட இயக்கத்தின்போது கலட்டின் கான்கள் மற்றும் பாகிஸ்தானின் நிறுவனர்களுக்கும் இடையே நல்லுறவு இருந்தது. ஆனால், பாகிஸ்தான் உருவான பிறகு அந்த நிலைமை மாறி, பகைமை ஏற்பட்டது.

இந்த நிகழ்வுகள் இந்திய பிரிவினையின் போதும், அதற்குச் சற்று முன்பும், பிரிட்டனைச் சேர்ந்த தனிநபர்களின் செயல்பாடுகளாலும் தொடங்கின.

'ஜவஹர்லால் நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்' எனும் புத்தகத்தில், கலட் கானுடனான தன்னுடைய தொடர்பு குறித்து குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கான் நேருவுக்கு 1946-ஆம் ஆண்டு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இருவரின் தொடர்புக்கான காரணங்களுள் ஒன்றாக, கலட்டை சுதந்திரமானதாக மாற்றும் பிரிட்டிஷாரின் யோசனையை காங்கிரஸ் நிராகரித்ததாகும்.

குல் கான் நசிரை அடிப்படையாகக் கொண்டு ஹமித் பலூச் எழுதுகையில், பாகிஸ்தானின் நிறுவனர் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், கலட் அரசின் மற்ற சமஸ்தானங்களை அதனுடன் திருப்பி அளிப்பதற்கும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.

அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து கலட்டை குத்தகைக்கு எடுத்திருந்தார், அது பிரிட்டிஷ் பலூசிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. ஜூன் 3 அன்று இந்தியாவின் பிரிவினை அறிவிக்கப்படும் வரை இந்த நிலை நீடித்தது.

அதாவது, இந்திய பிரிவினையின் போதும் நல்லுறவு தொடர்ந்தது. அடுத்து வந்த நாட்களில் சூழல் மாறும் அளவுக்கு என்ன நடந்தது? வெவ்வேறு அறிக்கைகள் இதற்கு இரு காரணங்களை குறிப்பிடுகின்றன.

இது தொடர்பாக காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் உறவுகளுக்கான அமைச்சரிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை முனைவர் ஹமித் பலூச் குறிப்பிட்டார்.

இந்தக் கடிதத்தில், அறிக்கைகளின்படி, பாகிஸ்தான் அரசாங்கம் கலட் பிராந்தியத்தின் சுதந்திரத்தை அங்கீகரிக்க உத்தேசித்துள்ளதாகவும், இதைத் தடுக்க வேண்டும் என்றும் கராச்சியில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உயர் ஆணையம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

அக்கடிதத்தில், "இரான் எல்லைக்கு அருகில் உள்ள கலட் பகுதியில் நிலவும் சூழ்நிலை, சர்வதேசக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு உகந்ததாக இல்லை. அதிகாரம் கைமாற்றப்படுவதற்கு முன்பே, இதுபோன்ற ஆபத்துகள் குறித்து மவுண்ட்பேட்டன் பிரபு பாகிஸ்தான் அரசாங்கத்திற்குத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நிலைமையை பாகிஸ்தான் அரசாங்கத்திற்குத் தெரிவிக்குமாறு பாகிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலட் அரசால் பூர்த்தி செய்ய இயலாது என்று காமன்வெல்த் கருதிய அபாயங்கள் மற்றும் சர்வதேசக் கடமைகள் யாவை?

எழுத்தாளர் ஹமித் பலூச் எழுதுகையில், "இந்த நலன்கள் வளைகுடா நாடுகளுடனும், இந்தப் பிராந்தியத்தின் வழியாக மேற்கு நோக்கிப் பாயும் எண்ணெயுடனும் தொடர்புடையவை." எனக் குறிப்பிட்டுள்ளார்.

கலட் கான் 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரத்தை அறிவித்தார். அதன்பின், நிலைமை தொடர்ந்து மாறியது. இத்தகைய சூழலில், ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் இருந்தன.

சுதந்திரப் பிரகடனத்திற்குப் பிறகு, கலட்டின் நிர்வாகத் தலைவர் நவாப்சாதா முஹம்மது அஸ்லாம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் டக்ளஸ் ஃபுல் ஆகியோர், கலட்டிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட மற்றும் கலட் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து பெற்ற பகுதிகளைத் திரும்பப் பெறுவது குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கராச்சிக்குச் சென்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில், பாகிஸ்தான் அரசாங்கக் குழு கலட்டைப் பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்று கோரியது. இதற்கு கலட் பிராந்தியத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, கலட் கான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை பாகிஸ்தானுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

அந்த நேரத்தில், கலட் தொடர்பாக ஐந்து முன்மொழிவுகள் பரிசீலனையில் இருந்தன:

  • எதிர்காலத்தில் ஒரு பெரிய பலூசிஸ்தானை நிறுவுவதற்கு வழிவகுக்கும் வகையில் இரான் பொறுப்பேற்க வேண்டும்.
  • ஆப்கானிஸ்தானுடன் இணைவது, பலூச் ஆட்சியாளர்களுக்கு ஆப்கானிஸ்தானுடன் நீண்டகால உறவுகள் இருந்தன.
  • இந்தியாவுடன் இணைவது.
  • பாகிஸ்தானுடன் இணைவது.
  • பிரிட்டிஷ் பேரரசின் நிழலில் வாழ்வது.
  • இந்த முன்மொழிவு பகிரங்கமாக இருந்தது, ஆனால் பிரிட்டிஷ் உயர் ஆணையரின் அறிக்கை சற்றே வித்தியாசமாக இருந்தது. கராச்சியில் இருந்த பிரிட்டிஷ் உயர் ஆணையர், கலட் கான் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக புது டெல்லியில் உள்ள தனது சக அதிகாரிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதம் மார்ச் 27, 1948 அன்று எழுதப்பட்டது.

    அன்றைய மாலை அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்ட மற்றொரு செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் செய்தியில், கலட் இந்திய யூனியனில் சேர அனுமதிக்க வேண்டும் என்று கலட் கான் இந்திய அரசாங்கத்திடம் கோரியதாக வி.பி. மேனன் வெளிப்படுத்தினார்.

    கலட் கானின் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்திற்குத் தெரிந்திருந்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இதனால்தான், கான் வெவ்வேறு விருப்பங்களைக் கருத்தில் கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் அவரது எதிரிகளை அணுகி, பாகிஸ்தானுடன் இணைய அவர்களைச் சம்மதிக்க வைத்தது.

    இந்தச் சூழலில், மக்ரான், கரன் மற்றும் லஸ்பிலா ஆகிய சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டன, இது கலட் பிராந்தியத்திற்கு பாகிஸ்தானுடன் இணைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்தியது.

    - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

    © Copyright @2025 LIDEA. All Rights Reserved.