தமிழ் சினிமாவின் மூத்த நடிகையும், எம்.ஆர். ராதாவின் மகளுமான ராதிகா, மீண்டும் ஒருமுறை தனது நடிப்பால் ரசிகர்களை மட்டுமல்ல, திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். சமீபத்தில் வெளியாகியுள்ள ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் டீசர், சமூக வலைதளங்களில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, ராதிகா ஏற்றுள்ள ‘பவுனு தாயி’ கதாபாத்திரமும், அவரது கெட்டப்பும், நடிப்பும் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.
பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராதிகா, முதல் படத்திலேயே தனது நடிப்புத் திறமையை நிரூபித்து, 80களில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர், அழகுக்கு மட்டுமல்ல, நடிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நடிகை என்ற பெயரை ஆரம்பத்திலேயே பெற்றார்.
ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்த பிறகும், கேரக்டர் ரோல்களை ஏற்று தன்னை தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டார் ராதிகா. ‘கிழக்கு சீமையிலே’, ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதேபோல், ‘சித்தி’ உள்ளிட்ட சீரியல்கள் மூலம் சின்னத்திரையிலும் தமிழ் குடும்பங்களின் ஒரு உறுப்பினராக மாறினார்.
தற்போதும் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் ராதிகா, கடைசியாக கீர்த்தி சுரேஷுடன் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும், அவரது நடிப்பு கவனம் பெற்றது. இந்நிலையில், ‘தாய் கிழவி’ படத்தில் அவர் ஏற்றுள்ள வயதான தாய் கதாபாத்திரம், அவரது திரை வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த படம் தொடர்பாக சமீபத்தில் பேட்டியளித்த ராதிகா, ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்தார். “‘தாய் கிழவி’யில் எனது மேக்கப்பை புகைப்படமாக எடுத்து கமல்ஹாசனுக்கு அனுப்பினேன். அதை பார்த்தவுடன் அவர் ரொம்ப த்ரில் ஆகி, ‘இப்படி ஒரு மாற்றத்தை வேறு எந்த ஹீரோயினும் செய்யவில்லை, நீ செய்திருக்கிறாய்’ என்று பாராட்டினார்” என்று கூறினார்.
மேலும், “டெங்கு காரணமாக நான் மருத்துவமனையில் இருந்தபோது, படத்தின் ட்ரெய்லரை பார்த்த கமல், இயக்குநர் பிரியாவுக்கு போன் செய்து ‘இந்த மாதிரி ஒரு நடிகை பிறந்துதான் வரணும்… She is the best’ என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். அதை கேட்டபோது நான் உண்மையிலேயே வானத்தில் பறந்தேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
ராதிகாவின் இந்த மாற்றமும், ‘தாய் கிழவி’ டீசரில் வெளிப்பட்ட அவரது அபாரமான நடிப்பும், இந்த படத்திற்கு மட்டுமல்ல, அவருக்கே விருதுகளை பெற்றுத் தரும் என ரசிகர்களும், திரையுலகினரும் இப்போதே கணித்து வருகின்றனர். 80களின் ஹீரோயினிலிருந்து, இன்றைய தலைமுறைக்கும் பாடம் கற்றுத்தரும் நடிகையாக ராதிகா மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்துள்ளார்.