விழுப்புரம் அருகே பிடாகம் குச்சிப்பாளையம் பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவியும், முதுமக்கள் தாழியுடன் புதைக்கப்பட்ட இரும்பு ஆயுதமும் கண்டறியப்பட்டுள்ளன.
புதிய கற்கால கைக்கோடரி: இது சுமார் 6.5 செ.மீ. நீளம் கொண்டது. கருங்கல்லால் ஆன இந்தக் கருவி நன்கு தேய்த்து மெருகேற்றப்பட்டு வழுவழுப்பாக உள்ளது. இதன் ஒரு முனை கூர்மையாகவும், மறுமுனை தட்டையாகவும் செதுக்கப்பட்டுள்ளது.
சுமார் 17 செ.மீ. நீளம் கொண்ட உடைந்த இரும்பு ஆயுதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது கருப்பு, சிவப்பு பானை ஓடுகளுக்கு மத்தியில் கண்டறியப்பட்டுள்ளது. முதுமக்கள் தாழியின் சிதைந்த பாகங்கள் மற்றும் சங்க காலத்திற்குரிய கருப்பு, சிவப்பு நிற மண்பாண்ட ஓடுகள் அதிகளவில் கிடைத்துள்ளன. தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நடத்திய இந்த ஆய்வின் மூலம் சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
கண்டெடுக்கப்பட்ட கைக்கோடரி கி.மு. 3,000 முதல் கி.மு. 1,000 வரையிலான புதிய கற்காலத்தைச் சேர்ந்தது. அதாவது இது சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானது. இக்காலகட்டத்தில் மனிதன் நிலையான இருப்பிடங்களை அமைத்து, விவசாயம் செய்யத் தொடங்கினான். இந்த வழுவழுப்பான கற்கருவிகள் வேட்டையாடவும், கிழங்குகளைத் தோண்டி எடுக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மண் அரிப்பு ஏற்பட்டு, புதையுண்டிருந்த முதுமக்கள் தாழியின் பகுதிகள் வெளியே வந்துள்ளன. அதனுடன் வைக்கப்பட்ட இரும்பு ஆயுதமே தற்போது கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற இடங்களைப் போலவே இங்கும் ஈமச் சடங்குகள் பின்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இதுவாகும்.

தென்பெண்ணை ஆற்றங்கரை நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதற்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு வலுவான சான்றாகும். ஏற்கனவே தமிழகத்தில் மயிலாடும்பாறை, பையம்பள்ளி போன்ற இடங்களில் புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள நிலையில், தற்போது விழுப்புரத்திலும் இது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!