“எல்லாமே மத்திய அரசு திட்டம்.. ஒட்டுவது ஸ்டிக்கர்!”.. பொங்கலுக்குப் பிறகு மாறும் அரசியல் களம்… நயினார் நாகேந்திரன் அதிரடி பேச்சு..!!!
SeithiSolai Tamil December 29, 2025 03:48 AM

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். “கடந்த 2002-ல் இறந்தவர்கள் கூட வாக்காளர் பட்டியலில் உயிருடன் உள்ளனர்;

இப்படி இறந்தவர்களை வைத்துதான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது” என அவர் பகீர் கிளப்பினார். மேலும், தமிழகத்தில் நாளொன்றுக்கு 6 கொலைகள் வீதம் இதுவரை 7,500 கொலைகள் நடந்துள்ளதாகவும், தவறு செய்பவர்களை அடக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் இரும்புக்கரம் தற்போது துருப்பிடித்துவிட்டதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

திமுக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் அர.சக்கரபாணி ஆகியோரின் தொகுதிகளில் மணல் கொள்ளையும், ரூ.100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பும் நடந்துள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

“தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டத்திலும் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் உள்ளது; ஆனால் திமுக அரசு அதில் ஸ்டிக்கர் ஒட்டுவதையே வேலையாகக் கொண்டுள்ளது” என்று அவர் சாடினார்.

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் பெறும் என்றும், வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்கும் நாள் வரும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.