கோவை மாவட்டம் அன்னூர் அருகே 5 வயது சிறுவனைக் கடத்தி ரூ.1.80 லட்சம் பேரம் பேசிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது நண்பரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஹக் – பர்பினா தம்பதியினர் ஓரைக்கல்பாளையம் பகுதியில் தங்கியிருந்து தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது 5 வயது மகன் ஹூமாயூனை, அதே தொழிற்சாலையில் பணிபுரியும் 17 வயது சிறுவன் ஒருவன் பானிபூரி வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் சென்றுள்ளார். ஒப்பந்ததாரர் சொரிபுல் என்பவர் தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளப் பணத்தை வழங்காமல் மோசடி செய்த நிலையில், அவரோடு நெருக்கமாக இருந்த அப்துல் ஹக்கின் மகனை கடத்தி பணம் பறிக்க அந்தச் சிறுவன் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு சிறுவனைக் கடத்திச் சென்ற மர்ம நபர்கள், அப்துல் ஹக்கைத் தொடர்பு கொண்டு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் வரை பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான தனிப்படையினர் செல்போன் சிக்னலை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புகாரளித்த 3 மணி நேரத்திலேயே பாலக்காட்டில் பதுங்கியிருந்த கடத்தல்காரர்களைச் சுற்றி வளைத்த போலீஸார், சிறுவன் ஹூமாயூனைப் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் மற்றும் அவனது நண்பர் அன்வோர் அலி (18) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.