“வங்கதேசத்தில் ஓயாத வன்முறை”… மரண தண்டனை பெற்ற ஷேக் ஹசீனா… முடிவுக்கு வந்த 16 வருட ஆட்சி… மாணவர்கள் போராட்டத்தால் மாறிய தலையெழுத்து… 2025 மீண்டும் ஒரு பார்வை..!!
SeithiSolai Tamil December 28, 2025 10:48 PM

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் பங்கேற்ற வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமானது எனக் கூறி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக மாறி, மாணவர்கள் – பாதுகாப்புப் படையினர் இடையே ஏற்பட்ட மோதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, அரசு அவசரமாக அந்த இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்தது. இருப்பினும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போன நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மாளிகை போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.

2009-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக வங்கதேசத்தை ஆட்சி செய்து வந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி, வெறும் மூன்று மாத கால மாணவர் போராட்டங்களால் முடிவுக்கு வந்தது. ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெற்ற வன்முறைகளில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர் என ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது.

ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் அடக்குமுறைகளை சந்தித்த பலர், அவரது ரகசிய சிறை என கூறப்படும் ‘கண்ணாடிகளின் வீடு’ சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதில் குறிப்பிடத்தக்கவர் 84 வயதான முகமது யூனுஸ். ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கான பொருளாதார, சமூக முயற்சிகளுக்காக 2006-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

ஆனால், யூனுஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் வங்கதேசத்தில் நிலைமை முழுமையாக சீரடைந்ததாக கூற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட வங்கதேசத்தில், சுமார் 22 சதவீதம் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் குறிவைக்கப்பட்டுள்ள நிலையில், இடைக்கால அரசு கண்டனம் தெரிவித்ததைத் தவிர, தாக்குதல்களை கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது. ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளதால், தற்போது நாட்டின் மிகப்பெரிய கட்சியாக உள்ள வங்கதேச தேசியவாத கட்சி (BNP) தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முகமது யூனுஸ் தலைமையிலான அரசு, பாரம்பரியமான இந்திய சார்பான வெளிநாட்டு கொள்கையிலிருந்து விலகி, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது. சமீபத்தில் சீனா சென்ற யூனுஸ், அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர், இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள ஏழு மாநிலங்களை (7 சகோதரிகள்) குறிப்பிட்டு, “அவை நிலத்தால் சூழப்பட்டவை. கடலை அடைய வங்கதேசம்தான் ஒரே வழி” என தெரிவித்தது. இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் மூலம், சீனா தனது பொருளாதார விரிவாக்கத்திற்கு வங்கதேசத்தை பயன்படுத்த அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என யூனுஸ் அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. மாணவர் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிட்டதாகக் கூறி, டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த மாதம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது.

மேலும், ஊழல் வழக்குகளில் அவருக்கு மொத்தமாக 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரி ஷேக் ரெஹானாவுக்கு 7 ஆண்டுகளும், பிரிட்டன் எம்.பி.யான மருமகள் துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஷேக் ஹசீனா விரும்பும் வரை இந்தியாவில் தங்கலாம். அது அவரின் தனிப்பட்ட முடிவு” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆண்டின் இறுதியில் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மாணவர் போராட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (32) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய எதிர்ப்பு உணர்வு அதிகரித்து, இந்திய தூதரகம், தூதர் இல்லம் மீது கல் வீச்சு நடத்தப்பட்டது. மேலும், ஒரு இந்து இளைஞர் அடித்து கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதவிர, வங்கதேச தேசியவாத கட்சியின் அமைப்பு செயலாளரும் தொழிலதிபருமான பெலால் ஹொசைன் வீட்டுக்கு தீவைக்கப்பட்டதில், அவரது 7 வயது மகள் ஆயிஷா அக்தர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாட்டில் பதற்றமான சூழல் தொடரும் நிலையில், போராட்டங்களை கைவிட வேண்டும் என முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், போராட்டங்களில் இந்திய எதிர்ப்பு மேலோங்கி காணப்படுவது, இந்தியா – வங்கதேச உறவுகளில் புதிய சிக்கல்களை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.