மதுரையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தன் மீதான அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது அல்லது ஓபிஎஸ்-இன் முடிவுகள் என எதற்கெடுத்தாலும் தன்னை தூண்டிவிடுபவராக சித்தரிப்பது தவறானது என அவர் குறிப்பிட்டார்.
கூட்டணி குறித்து பேசிய அவர், அமமுக-வின் கௌரவத்தை காக்கும் வகையிலும், தகுதியான வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கும் கூட்டணியிலேயே இணைவோம் என்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளதை ஒப்புக்கொண்ட அவர், இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என தெளிவுபடுத்தினார்.
டெல்லி பயணங்கள் அல்லது பாஜக சந்திப்புகள் குறித்த செய்திகள் வெறும் கற்பனை என்றும், எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணியாமல் தைரியமாக முடிவெடுப்போம் என்றும் அவர் கூறினார்.
மேலும், திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால், எதிர்வரும் தேர்தலில் மக்கள் அந்த ஆட்சிக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று விமர்சித்தார். தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் தினகரன் தெரிவித்தார்.
Edited by Siva