2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சமீபத்திய பேச்சுகள் கூட்டணியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.
வெறும் 5 அல்லது 10 தொகுதிகளுக்காக தவம் கிடக்க தேவையில்லை; தேவைப்பட்டால் கட்சியை கலைக்கவும் தயார்" என அவர் ஆவேசமாக பேசியிருப்பது, திமுக தலைமைக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கும் உத்தியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், சித்தாந்த ரீதியாக திருமாவளவன் இறுதியில் திமுக கூட்டணியிலேயே நீடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
மறுபுறம், காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தவெக-வுடன் இணையக்கூடும் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. தற்போதைய நிலையில் காங்கிரஸால் திமுகவை விட்டு வெளியேற முடியாது என்றாலும், தொகுதிகளை பேரம் பேசுவதற்கு 'விஜய் கார்டை' ஒரு ஆயுதமாக பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதிக இடங்களைப் பெறவும், கூட்டணியில் தங்களின் முக்கியத்துவத்தை நிலைநாட்டவும் இத்தகைய சலசலப்புகளை கூட்டணிக் கட்சிகள் உருவாக்கி வருகின்றன. இது 2026 தேர்தலில் திமுகவிற்கு தொகுதி பங்கீட்டில் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva