தமிழகம் முழுவதும் 2026 ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய சுமார் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 19,000 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் கண்காணிப்புப் பணியில் உள்ளனர். இன்று (டிசம்பர் 31) மாலை 6 மணி முதல் நாளை (ஜனவரி 1) அதிகாலை 1 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவகங்களில் 1 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சிகளோ அல்லது மது விநியோகமோ செய்யக்கூடாது எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விபத்துகளைத் தவிர்க்க இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை வரை சென்னையில் உள்ள முக்கிய மேம்பாலங்கள் மூடப்படும். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய 425 இடங்களில் வாகனத் தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதையில் வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், டிரோன் கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.