செங்கத்தில் செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் கிணற்றில் குதித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதிய குயிலம் கிராமம், தோப்பு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி - ஐஸ்வர்யா தம்பதி. இவர்களது மகள் செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டின் அருகே உள்ள ஊராட்சிப் பொதுக் குடிநீர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பாளையம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, கிணற்றிலிருந்து மாணவியின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட மாணவியின் உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள புதுப்பாளையம் காவல்துறையினர், மாணவி யாருடன் செல்போனில் பேசினார்? தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.