இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலில் மனதை பறிகொடுத்த அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் பதிவர் கேப்ருஜி (Gabruji), தாயகம் திரும்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பைக்கின் பின்னால் அமர்ந்து கண்ணீர் மல்கப் பேசிய அவர், “இது எனது விருப்பத்திற்குரிய நாடு; இங்கிருந்து பிரியவே மனமில்லை. நரேந்திர மோடி அவர்களே, எனக்கு ஒரு ஆதார் கார்டு கொடுத்துவிடுங்கள், நான் இங்கேயே தங்கிவிடுகிறேன்” என நகைச்சுவையுடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா குறித்த வெளிநாட்டவரின் தவறான கருத்துக்களை உடைத்தெறிந்த கேப்ருஜி, இங்குள்ள எளிமையான வாழ்க்கை முறை, எந்த நேரத்திலும் கிடைக்கும் தெருவோர உணவுகள் மற்றும் மக்களின் பாசம் ஆகியவை தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகக் கூறினார். “வெள்ளைக்காரராக இருப்பதால்தான் சகல வசதிகளும் கிடைப்பதாக நான் நினைத்தேன்; ஆனால் உண்மையான சுகபோகங்கள் இந்தியாவில்தான் இருக்கிறது. இந்த நாட்டை நான் ஆழமாக நேசிக்கிறேன்” என்று அவர் உருக்கமாகப் பேசியது பலரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது.