அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்ததாவது,"தமிழகம் போதைப் பொருள் இல்லாத மாநிலம்” என கூறுவது, முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலுக்கு சமம் என சாடியுள்ளார்.
இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில், கடுமையான நடவடிக்கைகளால் தமிழகம் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாறியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நடப்பாண்டில் சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 2,300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்திருப்பதும், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 102 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் கூறியிருப்பதும், அமைச்சர் கூறும் விளக்கங்களை கேள்விக்குறியாக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தணி ரயில்நிலையம் அருகே கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் வடமாநில இளைஞர் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதலும், திருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலரை போதை இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி விரட்டிய சம்பவமும், தமிழகத்தில் போதைப் பொருட்கள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதை வெளிப்படுத்துவதாக தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட கொடிய போதைப் பொருட்களைத் தடுக்க அரசு தவறியதன் விளைவாக, மனிதர்களையே கத்தியால் தாக்கி, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பும் அளவிற்கு மனிதநேயமற்ற மனநிலை உருவாகியுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழகமெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை உடனடியாக ஒடுக்குவதோடு, இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்கள் மீது கடுமையான, எடுத்துக்காட்டாக அமையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.