திருத்தணி அருகே உள்ள நெமிலி என்னும் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சில சிறுவர்கள் பட்டாக்கத்தியை கையில் வைத்துக் கொண்டு அலப்பறை செய்து அதை வீடியோவாக பதிவு செய்து தங்களின் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவர்களுக்கு மது மற்றும் கஞ்சா பழக்கம் அனைத்தும் இருந்ததாக சொல்லப்படுகிறது.
சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் ரயிலில் அவர்கள் வீடியோ பதிவிட்டு வந்திருக்கிறார்கள். பொதுமக்கள் யாரேனும் தட்டிக்கேட்டால் கத்தியை காட்டி மிரட்டி வந்திருக்கிறார்கள். இந்நிலையில்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு ரயிலில் அமர்ந்திருந்த வடமாநில இளைஞர் சுராஜிடம் அலப்பறை செய்து வீடியோ எடுத்திருக்கிறார்கள். அப்போது சுராஜ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கீழே இறக்கி ஆளில்லாத இடத்திற்கு கொண்டு சென்று அவரின் முகம், தலை என பல இடங்களிலும் கத்தியால் வெட்டி அதையும் வீடியோ எடுத்தனர்.
ஒரு கட்டத்தில் சுராஜ் மயக்கம் அடைய சிறுவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன்பின் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அவரை சுராஜை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஆம்புலன்ஸில் அவருடன் எந்த போலீஸ் யாரும் செல்லவில்லை. ‘ நோ அட்டெண்டர்’ என எழுதி அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. இதுபற்றி விளக்கமளித்த போலீஸ் ஐஜி ‘சுராஜ் அவர்களை பார்த்து முறைத்ததால் தாக்கியுள்ளனர்’ என சொல்லியிருக்கிரார்.
ஒருபக்கம் சுராஜை அந்த சிறுவர்கள் தாக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவலாகவே சுதாரித்த போலீசார் அந்த 4 சிறுவர்களையும் கண்டுபிடித்து கைது செய்து அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர். ஒருபக்கம் அந்த வாலிபர் முழுமையாக செய்து சிகிச்சை பெறாமலேயே ‘நான் ஊருக்கு போகிறேன்’ என எழுதி கொடுத்துவிட்டு மருத்துவமனையிலிருந்து சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.இதைத்தொடர்ந்து இந்த விஷயத்தில் மர்மம் இருப்பதாகவும், காவல்துறையினரும், மருத்துவர்களும் மெத்தனமாக செயல்பட்டிருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் பலரும் புகார் சொல்லி வருகிறார்கள்.