நாய்க்கடியால் இறந்த எருமை - தயிர் சாப்பிட்டவர்களுக்கு ரேபிஸ் அச்சம்
BBC Tamil January 01, 2026 03:48 PM
AMIT KUMAR ரேபிஸ் தடுப்பூசி பெறுவதற்காக பெண்கள் வரிசையில் நிற்கின்றனர்.

உத்தரபிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்தில் இறந்தவர் ஒருவரின் 13-ஆம் நாள் சடங்கில் தயிர் பச்சடி சாப்பிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் ரேபிஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

பதாவுன் மாவட்டத்தின் உஜைனி காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட பிப்ரௌல் கிராமத்தில் நடைபெற்ற 13-ஆம் நாள் சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கு தயிர் பச்சடி வழங்கப்பட்டுள்ளது.

அந்த தயிர் பச்சடி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பால் கறக்கப்பட்ட எருமைகளுள் ஒன்று இறந்துவிட்டதாக கிராமத்தினருக்கு பின்னர் தெரியவந்துள்ளது. அந்த எருமையை நாய் ஒன்று கடித்துவிட்டதாகவும் அதன்பின் எருமைக்கு ரேபிஸ் அறிகுறிகள் தென்பட்டதாகவும் கிராமத்தினர் கூறினர்.

லக்னௌவை சேர்ந்த மருத்துவர் பகார் ரஸா கூறுகையில், "ரேபிஸ் தாக்கப்பட்ட கால்நடைகளிடமிருந்து பாலை உட்கொண்டால், ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்," என்றார்.

"ரேபிஸ் தொற்று ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். எனவே, முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது," என பதாவுன் முதன்மை மருத்துவ அதிகாரி (CMO) ராமேஷ்வர் மிஷ்ரா கூறுகிறார்.

என்ன நடந்தது?

கிராமத்தினரின் கூற்றுப்படி கடந்த 23-ஆம் தேதி, ஒருவர் இறந்ததன் 13-ஆம் நாள் அனுசரிப்புக்காக கிராமத்தில் சடங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் கிராமத்தினர் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர், மற்ற கிராமங்கள், நகரங்களிலிருந்தும் உறவினர்கள், நண்பர்கள் வந்துள்ளனர். அப்போது உணவுடன் தயிர் பச்சடி பறிமாறப்பட்டது.

அந்த சடங்குக்கு பிறகு, அந்த தயிர் பச்சடிக்கு பயன்படுத்தப்பட்ட பால் கறக்கப்பட்ட எருமையை நாய் கடித்தது தெரியவந்ததாகவும், சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அந்த எருமையின் பால் மற்ற எருமைகளிடமிருந்து கறக்கப்பட்ட பாலுடன் கலந்துவிட்டது என்றும் கிராமத்தினர் கூறினர்.

டிசம்பர் 26-ஆம் தேதி உயிரிழந்த அந்த எருமையிடம் ரேபிஸ் அறிகுறிகளும் தென்பட்டன.

அதன்பின், டிசம்பர் 27-ஆம் தேதி கிராமத்தினர் மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தொடங்கினர்.

உஜைனி அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்ற கௌஷல் குமார் கூறுகையில், "தயிர் பச்சடிக்கு டிசம்பர் 26-ஆம் தேதி இறந்த எருமையின் பால் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த எருமையை நாய் ஒன்று ஏற்கெனவே கடித்திருந்ததாக பின்னர் எனக்கு தெரியவந்தது, எனவே நான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தேன்." என்றார்.

தங்களுக்கும் தீவிரமான மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய ரேபிஸ் வந்துவிடுமோ என மிகுந்த அச்சத்தில் இருப்பதாக கிராமத்தினர் சிலர் தெரிவித்தனர்.

மருத்துவர்கள் அறிவுரை

எருமை இறந்த தகவலை அறிந்த பின்னர், சிலர் முதலில் உஜைனி சமூக சுகாதார மையத்தை தொடர்புகொண்டுள்ளனர்.

மருத்துவர்களை ஆலோசித்த பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடிவெடுத்தனர்.

அதன்பின், பெரும்பாலான கிராமத்தினர் சுகாதார மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆரம்பித்தனர்.

இறந்தவரின் 13-ஆம் நாள் சடங்கில் சாப்பிட்ட தர்மா என்பவர் கூறுகையில், "எனக்கும் ரேபிஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ என அச்சமாக உள்ளது. அதனால்தான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தேன்." என்றார்.

சடங்கில் சாப்பிட்ட பெண்கள் பலரும் மருத்துவமனையில் வரிசையில் நின்றிருந்தனர்.

அவர்களுள் ஒருவரான கம்லேஷ் கூறுகையில், "நாங்கள் 13-ஆம் நாள் சடங்குக்கு சென்றோம். எருமைப் பாலை கொண்டு தயாரிக்கப்பட்ட தயிர் பச்சடியை சாப்பிட்டோம். அந்த எருமை இறந்துவிட்டது, அதனால் தான் நாங்கள் இங்கு வந்தோம்." என்றார்.

AMIT KUMAR சடங்கில் கலந்துகொண்ட கம்லேஷ் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

முதன்மை மருதுத்துவ அதிகாரி ராமேஷ்வர் மிஷ்ரா கூறுகையில், டிசம்பர் 28-ஆம் தேதி வரை 166 பேர் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது சுமார் 250ஆக இருக்கலாம்.

ரேபிஸ் ஒரு தீவிரமான நோய் என்றும் எந்தவிதத்திலும் சந்தேகம் எழுந்தால் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிசம்பர் 27-ஆம் தேதி சுகாதாரத்துறைக் குழுவினர் அக்கிராமத்திற்கு சென்று, மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், ரேபிஸ் தடுப்பூசியை முழு டோஸ் செலுத்திக் கொள்வது மிகவும் முக்கியம் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

கிராமத்தில் யாருக்கும் தற்போதைக்கு ரேபிஸ் அறிகுறிகள் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை கூற்றின்படி, கிராமத்தில் இயல்புநிலை நிலவுகிறது.

பதாவுன் முதன்மை மருத்துவ அதிகாரி ராமேஷ்வர் மிஷ்ரா கூறுகையில், "அந்த தயிர் பச்சடியை சாப்பிட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதை செலுத்திக் கொள்வதில் எந்த ஆபத்தும் இல்லை." என்றார்.

"ரேபிஸ் வந்தால் குணப்படுத்த முடியாது என்பதால், முன்னெச்சரிக்கையாக இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் எந்த ஆபத்தும் இல்லை." என்றார் அவர்.

ரேபிஸ் குறித்த புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன? AMIT KUMAR தயிர் பச்சடிக்கு பயன்படுத்தப்பட்ட பால் கறக்கப்பட்ட எருமைக்கு ரேபிஸ் அறிகுறிகள் இருந்ததை மக்கள் கண்டறிந்தனர்.

இதனிடையே கோரக்பூரிலும் சுமார் 200 பேர் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்தியா டுடே இதழில் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கோரக்பூரின் உருவா வட்டத்தில் உள்ள ராம்டி கிராமத்தில் ரேபிஸ் பாதிக்கப்பட்ட மாடு ஒன்று இறந்துள்ளது.

அச்செய்தியின்படி, அந்த மாட்டின் பால் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்கள் கூற்றின்படி, சுமார் 200 பேர் அந்த பாலை உட்கொண்டுள்ளனர்.

அந்த மாட்டை மூன்று மாதங்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று கடித்ததைத் தொடர்ந்து, அசாதாரணமான, ஆக்ரோஷமான நடத்தையை அது வெளிப்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் அந்த அறிகுறிகளை ரேபிஸ் நோயுடன் தொடர்புபடுத்தினர்.

அந்த மாடு இறந்ததைத் தொடர்ந்து, அந்த பாலை அருந்திய அனைவரையும் ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

உருவா ஆரம்ப சுகாதார மையத்தின் பொறுப்பாளராக உள்ள மருத்துவர் ஏபி சிங் கூறுகையில், தற்போது வரை 170க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

ரேபிஸ் பாதித்த விலங்குகளிடம் பெறப்படும் உணவுப் பொருட்களை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

லக்னௌவை சேர்ந்த மருத்துவர் பகார் ரஸா கூறுகையில், "ரேபிஸால் பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது கால்நடைகளின் பால் அல்லது இறைச்சியை உட்கொண்டால் ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியம். காய்ச்சப்பட்ட பாலில் இதற்கான ஆபத்து குறைவு என்றாலும், ரேபிஸை குணப்படுத்த முடியாது என்பதால் முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொள்வது அவசியம்." என்றார்.

பல்ராம்பூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் கௌரி சங்கர் வர்மா கூறுகையில், "காய்ச்சப்பட்ட பாலில் ஆபத்து குறைவு, என்றாலும் எந்த வெப்பநிலையில் எவ்வளவு நேரம் சூடுபடுத்தப்பட்டது என்பது தெரியாததால் அதில் இன்னும் ஆபத்து உள்ளது," என்றார்.

மருத்துவர் கௌரி சங்கர் வர்மா கூறுகையில், "முன்னெச்சரிக்கையாக அனைவருக்கு ஐந்து டோஸ் ரேபிஸ் தடுப்பூசி வழங்கப்படுகிறது. முதல் டோஸ் வழங்கப்பட்டு மூன்று தினங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸும் ஏழாம் நாளில் மூன்றாம் டோஸும் வழங்கப்படுகிறது. 14வது நாளில் நான்காம் டோஸும் 28வது நாளில் கடைசி டோஸும் வழங்கப்படுகிறது." என்றார்.

சுகாதார நிபுணர்கள் கூறுகையில், உயிரிழப்பை ஏற்படுத்தும் ரேபிஸை சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் முற்றிலும் தடுக்க முடியும் என்கின்றனர். அப்படியான சமயங்களில், விழிப்புணர்வும் எச்சரிக்கையுடனும் இருப்பதே சிறந்த தற்காப்பு நடவடிக்கை.

இதனிடையே, இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.

2023-ஆம் ஆண்டில் சுமார் 30 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

மக்களவையில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மத்திய இணையமைச்சர் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில், "2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் 37 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் 54 பேர் ரேபிஸால் உயிரிழந்தனர்," என தெரிவிக்கப்பட்டது.

தேசிய ரேபிஸ் தடுப்பு திட்டத்தின்கீழ் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.