தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும்” என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:
SIR படிவங்களில் விடுபட்ட பெயர்களைச் சேர்ப்பது மற்றும் அது தொடர்பாக வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்திப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த நாமக்கல் வந்துள்ளேன். இதுதவிர பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சேலத்தில் நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு கூட்டத்திற்குப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், அந்த நிகழ்வு தள்ளிப்போனது. இருப்பினும், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் அதிகாரப்பூர்வமான மக்கள் சந்திப்பு குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்.
கூட்டணி குறித்துப் பேசிய அவர், “கடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் ஒரு குழு அமைக்கப்படும். தவெக தலைமையில் ஒரு மிகப்பெரிய கூட்டணி அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எங்கள் தலைவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
குறிப்பாக, திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளைத் தவிர்த்து, விஜய்யை முதலமைச்சராக ஏற்று யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களைத் தமிழக வெற்றிக் கழகம் அரவணைத்துச் செல்லும். வரவிருக்கும் தேர்தலில் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்பார்,” என்று உறுதியாகத் தெரிவித்தார்.