தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப் பெருந்தகை இருக்கிறார். இவர் இன்று எம்பி ஜோதிமணி சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டது தொடர்பாக தன்னுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இந்த சர்ச்சை ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது பிரவீன் சக்கரவர்த்தி உத்திரபிரதேசத்தின் கடனை விட தமிழகத்தின் கடன் அதிகமாக இருப்பதாக கூறிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக ஒரு செய்தி பரவி வருகிறது.
அதே நேரத்தில் இன்று வைகோ கலந்து கொண்ட நடைபயணம் நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்ததும் பேசும் பொருளாக மாறியது. இந்த நிலையில் தற்போது செல்வப் பெருந்தகை தலைமையின் கீழ் சுயமரியாதை கிடைக்காததால் பணிபுரிய விரும்பவில்லை எனக் கூறி வழக்கறிஞர் ஏ.பி. சூரிய பிரகாசம் கட்சியில் தான் பதவி வகித்து வந்த தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் திமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைத்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற காங்கிரஸ் கட்சியின் கனவு நனவாகும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.