ஆறுகளில் இருந்து மணல் எடுத்து படகுகளில் ஏற்றி வருவது மிகவும் ஆபத்தான பணியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றப்படும் போது படகுகள் நிலைதடுமாறி ஆற்றில் கவிழும் அபாயம் எப்போதும் உள்ளது. இது போன்ற ஒரு பதறவைக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில், மணல் பாரம் ஏற்றப்பட்ட படகு ஒன்று ஆற்றின் கரையில் நின்று கொண்டிருக்கும் போது, அதன் எடையைக் குறைப்பதற்காக சில தொழிலாளர்கள் மணலை ஆற்றில் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென படகின் சமநிலை தவறி ஒரு பக்கமாகச் சாயத் தொடங்கியது. நிலைமை மோசமாவதை உணர்ந்த படகில் இருந்த தொழிலாளர்கள், நொடிப் பொழுதில் ஆற்றில் குதித்து உயிர் தப்பினர்.
அடுத்த சில விநாடிகளில் அந்தப் படகு ஆற்றில் முழுவதுமாக மூழ்கியது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாகக் குதித்ததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.