தமிழகத்தில் இன்று மழை வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!!
TV9 Tamil News January 02, 2026 11:48 PM

சென்னை, ஜனவரி 01: தமிழகத்தில் நேற்று சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து, இன்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் தான் கடைசியாக மழை பெய்தது. அதன்பின், அனைத்து பகுதிகளிலும் பனி மற்றும் குளிரின் தாக்கமே அதிகமாக இருந்தது. இந்தநிலையில், புத்தாண்டு பிறந்த முதல் நாளே சென்னையில் மழை வெளுத்துவாங்கியது. இதனால், நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்ற மக்கள் கொட்டிய மழையில் நனைந்தவாரே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தமிழகத்தில் மழை வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.

மேலும் படிக்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு.. நாளைக்குள் டோக்கன்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.. நியாய விலை கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

வானிலை மையம் கொடுத்த தகவல்:

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், லட்சதீவு – குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோன்று இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜன.2), தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதைசமயம், வட தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

அடுத்த 6 நாட்களுக்கு மழையும், பனியும் நீடிக்கும்:

தொடர்ந்து, வரும் ஜனவரி 7ம் தேதி வரை அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதேசமயம், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 3 முதல் 5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது.

மேலும் படிக்க : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல்…தமிழக எல்லையில் பலத்த கண்காணிப்பு…வாகனங்களுக்கு தடை!

சென்னை மழை நிலவரம்:

சென்னையை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.