பிரபல தென்னிந்திய நடிகை ஆஷிகா ரங்கநாத், பேருந்து பயணத்தின் போது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இரவு நேரத்தில் பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தபோது, யாரோ ஒருவர் தன் மீது கை வைப்பதை அவர் உணர்ந்துள்ளார்.
மேலும் முதலில் அது என்னவென்று புரியாமல் திணறியவர், பின்னர் தான் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த நபர் அநாகரீகமான முறையில் அத்துமீறி நடந்து கொள்கிறார் என்பதை அதிர்ச்சியுடன் உணர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆஷிகா, பொது இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த “இரவு நேர பயணங்களில் ஜன்னல் சீட்டில் அமரும்போது நாம் பாதுகாப்பாக உணர்கிறோம், ஆனால் அங்கேயும் இத்தகைய அத்துமீறல்கள் நடப்பது வேதனை அளிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவருடைய இந்த துணிச்சலான பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, பெண்களுக்கு எதிரான இத்தகைய செயல்களுக்கு பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.