எம்ஜிஆர் பெயர், படம் நீக்கம்… திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
TV9 Tamil News January 03, 2026 02:48 AM

சென்னை, ஜனவரி 2: தஞ்சாவூர் (Thanjavur) தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில், அந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவிய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரும், புகைப்படமும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனவரி 2, 2026 அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  எம்.ஜி.ஆரின் புகழை மறைக்க முயற்சிப்பவர்கள் அழிந்து போவார்கள் எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.  அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

எம்ஜிஆர் பெயர், புகைப்படம் நீக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகும், கோடிக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருகிறார். 53 ஆண்டுகளுக்கு முன்பு புரட்சித் தலைவர்மீது திமுகவுக்கு இருந்த பகை உணர்வு, இன்றளவும் குறையாமல் இருப்பது, திமுக அரசின் செயல்பாடுகளில் வெளிப்படையாகத் தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : “பழைய ஓய்வூதிய திட்டம்”…முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பு!

கடந்த 1981 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அந்தப் பல்கலைக்கழகம் இதுவரை பல தமிழறிஞர்களை உருவாக்கி வந்துள்ளது. ஆனால் தற்போது அந்தப் பல்கலைக்கழக இணையதளத்தில், நிறுவனர் பற்றிய தகவலில் புரட்சித் தலைவரின் பெயர் மறைக்கப்பட்டுள்ளதாகவும், புகைப்பட பகுதியில் இருந்த அவரது படம் நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் பதிவு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயரை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விளம்பர மாடல் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு கண்டனம்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் pic.twitter.com/ZbcJAKkseS

— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial)

மேலும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனான முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது தந்தையின் பெயரை கழிப்பறை முதல் காவாங்கரை வரை இடம் பெற்றுவைத்துக் கொண்டிருக்கும் நிலையில், புரட்சித் தலைவர் நிறுவிய தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரது பெயரை அகற்றியிருப்பது, ஸ்டாலினின் அகந்தையின் உச்சம் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க : மதிமுக அழைப்பிதழில் பிரபாகரன் படம் தான் காரணமா?..வைகோ நிகழ்ச்சியை புறக்கணித்த காங்கிரஸ்..

திருமணத்தை நிறுத்த சீப்பை மறைத்தால் போதுமென்று நினைப்பது போல, புரட்சித் தலைவரின் புகைப்படத்தை இணையதளத்தில் இருந்து அகற்றினால் அவரது புகழ் மறைந்து விடும் என்று நினைப்பது, மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, தன் சொத்துகளை மக்களுக்கே வழங்கிய புரட்சித் தலைவர், மக்களால் கோவில்கள் கட்டப்பட்டு வழிபடப்படும் அளவுக்கு உயர்ந்தவர் எனக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, “அரசியலை பயன்படுத்தி ஊழலின் மூலம் தலைமுறைகளாக செல்வம் சேர்த்த கருணாநிதி குடும்பத்தின் சூழ்ச்சியும் வஞ்சகமும் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும், புரட்சித் தலைவரின் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்பது வரலாற்று உண்மை. உடனடியாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் புரட்சித் தலைவரின் பெயரும், புகைப்படமும் மீண்டும் இடம் பெற வேண்டும். புரட்சித் தலைவரின் புகழை அழிக்க முயற்சிக்கும் ஸ்டாலினுக்கு, தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்” என எச்சரித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.