2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து முதலிடத்தைப் பிடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து தலைநகர் சென்னையில் எழும்பூர் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் மட்டும் மாலை வரை 46 குழந்தைகள் பிறந்துள்ளன. மாவட்ட வாரியாகப் பார்க்கையில் சேலத்தில் 29, விழுப்புரத்தில் 27 மற்றும் நெல்லையில் 24 குழந்தைகள் என அந்தந்த மருத்துவமனைகளில் மகிழ்ச்சி அலை வீசியது.
மேலும் தஞ்சை, மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா 22 குழந்தைகளும், செங்கல்பட்டு, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் தலா 20 குழந்தைகளும் புதிய வரவாக இணைந்துள்ளன. மயிலாடுதுறை (16), கிருஷ்ணகிரி (15), புதுக்கோட்டை (14) ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து கடலூர், திருப்பூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் தலா 13 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா 3 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், புத்தாண்டு தினத்தன்று பிறந்த இந்த ‘குட்டி’ தேவதைகளை உறவினர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.