கடந்த 2024 ஆண்டு நடந்த, கர்நாடகா லோக்சபா தேர்தலின் போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு 85 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளமை, ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. 'இது காங்கிரசின் முகத்தில் விழுந்த அறை' என்று பாஜ விமர்சித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. 'லோக்சபா தேர்தல்கள் 2024 குடிமக்களின் அறிவு, அணுகுமுறை மற்றும் நடைமுறை பற்றிய மதிப்பீடு' என்ற தலைப்பில் ஆய்வின் ஒரு பகுதியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், மொத்தம் 34 மாவட்டங்களை உள்ளடக்கிய 102 சட்டசபை தொகுதிகிளில் 5100 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, இந்த ஆய்வின் முடிவில், 83.61 சதவீதம் பேர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் நம்பகமானது என்று கூறியுள்ளனர். குறிப்பாக, ஒட்டு மொத்தமாக, 69.39 சதவீதம் பேர் இந்த இயந்திரங்கள் துல்லியமான முடிவுகளை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக இந்த ஆய்வின் கணக்கெடுப்பு, பெங்களூரு, பெலகாவி, கலபுராகி, மைசூரு ஆகிய மண்டலங்களில் உள்ள மக்களிடம் நடத்தப்பட்டது. அவர்களில் கலபுராகி பகுதியில் 83.24 சதவீதம் பேர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் நம்பகமானது என்று தெரிவித்துள்ளனர். மைசூருவில் 70.67 சதவீதம், பெலகாவியில் 63.90 சதவீதம், பெங்களூருவில் 63.67 சதவீதம் பேர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி, ராகுலை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறுகையில்; ''நாடு முழுவதும் பயணித்து, நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று கதை சொன்னவர் ராகுல். இப்போது கர்நாடகா ஆய்வுகள் வித்தியாசமான கதையை சொல்லி இருக்கிறது. மக்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை நம்புகின்றனர். காங்கிரசின் கண்டுபிடிப்பு, அக்கட்சியின் முகத்தில் விழுந்த ஓர் அறை'' என்று கூறியுள்ளார்.

இது குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷெசாத் பூனம்வாலா குறிப்பிட்டுள்ளதாவது:
''கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது தேர்தல் கமிஷன் மீது எவ்வித புகாரும் கூறாதவரும் இதே ராகுல்தான். தேர்தலில் தோற்கும் போது தேர்தல் கமிஷனை குற்றம் சொல்கிறார். அவரிடம் தான் பிரச்சினை உள்ளது, தரவுகளில் அல்ல. அதை ஏற்றுக் கொள்ளாமல் ஒரு மாயையில் வாழ்கிறார்'' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.