மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில், 'பாரத் 2026' என்ற இந்திய அரசு காலண்டர் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன் காலண்டரை வெளியிட்ட பின், பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில், நுாறு நாள் வேலை உறுதி திட்டம் மாற்றப்பட்டு, 'விபி ஜி ராம் ஜி' என்ற சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் தொடர்பாக, இரு அவைகளிலும், விவாதம் நடந்த பின், சட்டம் நிறைவேற்றப்பட்டது என்று குறிப்பிட்டார்.
இந்த 'விபி ஜி ராம் ஜி' சட்டம் இயற்றப்படும் போது, பாராளுமன்றத்தில் தி.மு.க., உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களும் இச்சட்டம் குறித்து பேசினர். ஆனால், தற்போது இச்சட்டத்தை எதிர்த்து, மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை பறித்து விட்டதாக போலியாக பிரசாரம் செய்கின்றனர் என்று குறிப்பிட்டதோடு, மேலும், 100 நாட்களாக இருந்த வேலை, இன்று 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இச்சட்டத்தின் வழியே, பயனாளிகளுக்கு வாரம் ஒரு முறை சம்பளம் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முருகன் கூறியதோடு, சட்டம் நிறைவேற்றப்படும் போது, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்துவிட்டு, தேர்தலையொட்டி 100 நாள் வேலை பறிக்கப்பட்டதாக கூறி, மக்களை திசை திருப்பும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், 'விபி ஜி ராம் ஜி' திட்டத்தில், வேலை வாய்ப்புகளை, மத்திய அரசு பறித்ததாக குற்றம்சாட்டும், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா..? என்று கேள்வி எழுப்பினார்.