அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள கடும் விமர்சன அறிக்கையில், நாமக்கல் மாநகராட்சியின் 4-வது வார்டில் நடந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு, தண்ணீர் நிரம்பி பாதுகாப்பின்றி விடப்பட்ட 5 அடி ஆழக் குழியில் தவறி விழுந்து, 4 வயது சிறுவன் ரோகித் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரிதாபகரமான உயிரிழப்புக்கு முழுப் பொறுப்பும் திமுக அரசின் நிர்வாக அலட்சியமே என்று குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, “கமிஷன் வாங்குவதிலும், டெண்டர் கொள்ளையிலும் காட்டும் ஆர்வத்தை, மக்கள் உயிரைக் காக்கும் பாதுகாப்பு பணிகளில் இந்த விடியா அரசு ஏன் காட்டவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது முதல் முறை நடந்த சம்பவமா என்றும் அவர் சாடியுள்ளார். தவறு ஒருமுறை நடந்தால் அதை தவறென்று சொல்லலாம்; ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது நிர்வாகச் சீர்கேட்டின் வெளிப்படையான சாட்சி மட்டுமல்ல, அலட்சியத்தால் நிகழும் கொலை என்றே கூறலாம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், பச்சிளம் குழந்தையை இழந்து கதறி நிற்கும் பெற்றோருக்கு, “தெரியாமல் நடந்துவிட்டது… மன்னித்துவிடுங்கள்” என்ற பதிலைத்தவிர இந்த பொம்மை முதல்வர் என்ன சொல்லப்போகிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னும் எத்தனை உயிரிழப்புகளுக்கு இதே விளக்கத்தை மக்கள் கேட்க வேண்டியிருக்கும் என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.உயிரிழந்த சிறுவன் ரோகித்தின் பெற்றோருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அரசு வழங்கியுள்ள நிவாரணம் போதுமானதல்ல என்றும் கூறியுள்ளார்.
எந்த அளவு இழப்பீடு வழங்கினாலும் குழந்தையின் உயிரை ஈடு செய்ய முடியாது என்றாலும், இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், இனி பாதாள சாக்கடை உள்ளிட்ட பொதுப் பணிகளை மேற்கொள்ளும் போது முழுமையான பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.