சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 48 வயதான ஜாங் என்பவர், கடந்த 30 ஆண்டுகளாகக் கண்ணாடித் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
1000 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பத்தில் உருகிய கண்ணாடியைச் சரியான வடிவத்திற்கு கொண்டு வர, 1.5 மீட்டர் நீளமுள்ள குழாய் வழியாகத் தனது வாயால் காற்று ஊதுவது தான் இவரது வேலை.
பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இப்படி வாயால் பலமாகச் காற்றை ஊதியதன் விளைவாக, அவரது முகத் தசைகள் தளர்ந்து, இப்போது அவர் லேசாகக் காற்று ஊதினாலே முகம் ‘தவளை’யைப் போலப் பலூன் மாதிரி உப்பி விடுகிறது.
சீனாவின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான இந்தக் கண்ணாடி ஊதும் கலையில் ஜாங் ஒரு கைதேர்ந்த கலைஞர். எந்திரங்களால் ஒரு நிமிடத்திற்கு 45 கப்களை உருவாக்க முடிந்தாலும், மனிதர்கள் கையால் ஊதிச் செய்யும் கண்ணாடிக் கலைப்பொருட்கள் மிக மெல்லியதாகவும், தரமானதாகவும் இருக்குமாம்.
தனது வேலையின் மீதுள்ள காதலால் ஜாங் தனது முக மாற்றத்தைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படவில்லை. இவரை அங்குள்ள மக்கள் அன்போடு ‘பெரிய வாய் அண்ணன்’ என்றும், ‘தவளை இளவரசன்’ (Frog Prince) என்றும் அழைக்கின்றனர். உழைப்பால் ஒரு மனிதனின் அடையாளமே மாறியுள்ள இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.