'வழக்கம் போல ஏமாற்றத்தைப் பரிசளித்துள்ள திமுக அரசு பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பணமும் தர வேண்டும்': நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!
Seithipunal Tamil January 03, 2026 12:48 PM

பொங்கல் பரிசுத் தொகுப்பில் மக்களின் நம்பிக்கையை உடைத்து, வழக்கம் போல திமுக அரசு ஏமாற்றத்தைப் பரிசளித்துள்ளதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''இன்னும் 13 நாட்களில் பொங்கல் திருநாள் வரவிருக்கும் வேளையில், இப்போது தான் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது திமுக அரசு.

பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கவேண்டும் எனப் பொதுமக்களும், தொகுப்பில் மஞ்சள் கிழங்கு, வெல்லம் வழங்கிட கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகளும் எதிர்பார்த்து வரும் வேளையில், சொற்பத் தொகையை ஒதுக்கி, அவர்களின் நம்பிக்கையை உடைத்து, வழக்கம் போல ஏமாற்றத்தைப் பரிசளித்துள்ளது திமுக அரசு.

வருடா வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நிலையில், இத்தனை நாட்கள் பரிசுத் தொகுப்புக்கான கரும்பையும் பச்சரிசியையும் சக்கரையையும் கொள்முதல் செய்யாதது ஏன்? ஒருவேளை, கடைசி நேரத்தில் கண்துடைப்புக்காக ஏனோதானோ எனக் கொள்முதல் செய்து, உழவர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றும் திட்டமா?

ஆட்சி முடியும் தருவாயிலாவது திமுக அரசின் போங்காட்டத்தை ஒதுக்கி வைத்து உடனடியாகக் கரும்பையும் மஞ்சளையும் வெல்லத்தையும் கொள்முதல் செய்து, ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசை முதல்வர் ஸ்டாலின் சரிவர வழங்க வேண்டும்.

வழக்கமான பாசாங்கு வேலைகளை விடுத்து, உடனடியாக விவசாயிகளிடமிருந்து பொருட்களைக் கொள்முதல் செய்து, தமிழக மக்களுக்கு ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பை திமுக அரசு வழங்க வேண்டும்.'' என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.