“இதயக்கனியின் புகழை மறைக்க முடியாது” கொதிக்கும் அதிமுக தொண்டர்கள்.. திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி விடுத்த கடும் எச்சரிக்கை..!!
SeithiSolai Tamil January 03, 2026 02:48 PM

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து அதன் நிறுவனர் எம்.ஜி.ஆரின் பெயர் மற்றும் புகைப்படம் நீக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1981-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றை மறைக்க திமுக அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கருணாநிதியின் பெயரை எல்லா இடங்களிலும் சூட்டி மகிழும் முதலமைச்சர் ஸ்டாலின், எம்.ஜி.ஆரின் அடையாளங்களை அகற்றுவது அவரது மமதையின் உச்சம் என்று எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடாது என்பதைப் போல, இணையதளத்தில் இருந்து படத்தை நீக்குவதால் மக்களின் இதயங்களில் வாழும் எம்.ஜி.ஆரின் புகழை அழித்துவிட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு உடனடியாக இந்த வன்மத்தைக் கைவிட்டு, பல்கலைக்கழக இணையதளத்தில் மீண்டும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பதிவேற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.