மத்திய பிரதேச மாநிலத்தில் மாசடைந்த குடிநீரை பருகியதால் ஏற்பட்ட விபரீதத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் மக்களின் தகவல்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக சுமார் 200 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 32 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நர்மதா ஆற்றங்கரையிலிருந்து குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை பருகியவர்களுக்கே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடிநீர் விநியோகக் குழாய்களில் கழிவுநீர் கலந்திருக்கலாம் அல்லது ஆற்று நீர் மாசடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தண்ணீரின் நிறம் மற்றும் சுவையில் மாற்றம் இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது மருத்துவ குழுவினர் அந்தப் பகுதியில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குடிநீரை உடனடியாகப் பரிசோதனை செய்து, பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Edited by Mahendran