திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் கமாண்டோ ஹ. பாஸ்கரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி, அதன் கண்ணியத்துக்கும் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஸ்கரன் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,கட்சியின் கொள்கைகள், குறிக்கோள்கள் மற்றும் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதும், கழக சட்டத் திட்டங்களை மீறி ஒழுங்குமுறையை பாதிக்கும் வகையில் நடந்துகொண்டதும், மேலும் கழகத்தின் கண்ணியத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் செயல்களில் ஈடுபட்டதுமே இந்த நீக்கத்திற்கு காரணம் என விளக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ ஹ. பாஸ்கரன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கழக உடன்பிறப்புகள் யாரும் பாஸ்கரனுடன் எவ்விதமான தொடர்பையும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அதிமுக தலைமையகம் கடுமையாக கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கை, கட்சியின் ஒழுங்குமுறையை நிலைநாட்ட எடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.