எலான் மஸ்கின் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட க்ரோக் ஏஐ, எக்ஸ் (X) சமூக வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவின் புதிய யுகத்தை அறிமுகப்படுத்திய இந்த தொழில்நுட்பம், தற்போது சில பயனர்களின் தவறான செயல்களால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் சிலர், க்ரோக் ஏஐ-யை கருவியாக கொண்டு பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை அனுமதியின்றி மாற்றியமைத்து, அவற்றை ஆபாச மற்றும் பாலியல் உள்ளடக்கங்களாக உருவாக்கி பதிவேற்றியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இவ்வாறு உருவாக்கப்பட்ட போலி படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மாநிலங்களவையில் இந்த பிரச்சினையை எழுப்பி, எக்ஸ் தளத்தின் கண்காணிப்பு கொள்கைகள் தோல்வியடைந்துள்ளதாக கடுமையாக விமர்சித்தார்.
பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இதனைத் தொடர்ந்து, க்ரோக் ஏஐ-யை பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆபாச படங்கள், பாலியல் வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்த கணக்குகளை கண்டறிந்து உடனடியாக நீக்க வேண்டும் என எக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்காக 72 மணி நேர காலக்கெடும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“க்ரோக் ஏஐ செயலியை தவறாக பயன்படுத்தி சட்டவிரோத தகவல்கள், ஆபாச படங்கள் அல்லது பாலியல் உள்ளடக்கங்களை பதிவேற்றும் பயனர்கள் எந்த தயவுமின்றி நடவடிக்கையை சந்திக்க நேரிடும்
இவ்வகை செயல்களில் ஈடுபடும் கணக்குகள் நிரந்தரமாக தடை செய்யப்படும்,”என்று கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த சம்பவம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு கட்டுப்பாடுகள் அவசியம் என்பதையும், சமூக ஊடகங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளதையும் வெளிப்படுத்துகிறது.