தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், முக்கிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக கட்சித் தாவல் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், இன்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைகின்றனர். இந்த இணைப்பு விழா, கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.

இதன்படி, தஞ்சை மத்திய மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் இன்று தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார். அதேபோல், ஒட்டன்சத்திரம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம்வும் விஜய் முன்னிலையில் தவெகவில் சேருகிறார்.
மேலும், புதுவை முன்னாள் ஐஜி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, மற்றும் காங்கிரஸ், தேமுதிக கட்சிகளைச் சேர்ந்த பல நிர்வாகிகளும் தவெகவில் தங்களை இணைத்துக் கொள்ள உள்ளனர்.
இதனுடன், நாதகவில் இருந்து விலகி சமீபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்திருந்த ஜெகதீச பாண்டியன் இன்று தவெகவில் இணைவது அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சி 23வது வார்டு கவுன்சிலர் ராஜன் பர்னபாஸ் கூட தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி, அரசியல் களத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளன.
இந்த தொடர் இணைப்புகள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய சமன்பாடுகளை உருவாக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்