தேசிய அளவிலான தலைவர்கள் 2026 தேர்தலை முன்னிட்டுத் தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ராகுல் காந்தி ஜனவரி நான்காம் வாரத்தில் தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக காங்கிரஸில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் அண்மைக்காலமாகத் தெருச்சண்டை வரை சென்றுள்ள நிலையில், கட்சியின் ஒற்றுமையை நிலைநாட்ட ராகுல் காந்தி நேரடியாகக் களம் இறங்குகிறார். இந்தப் பயணத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
முக்கியமாக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கேட்கப்போகும் இடங்கள் குறித்தும், அதிமுக அல்லது தவெக போன்ற கட்சிகளின் வருகையினால் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும் ராகுல் காந்தி தனது கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க உள்ளார். ராகுல் காந்தியின் இந்த வருகை, தமிழக காங்கிரஸில் நிலவும் கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸின் பலத்தை அதிகரிக்குமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.