டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு, மனிதநேயமும் சட்டமும் இணையும் விதத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அந்த மனுவில், ஒரு பெண்,
“கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் எனது கணவருக்கு ஏற்பட்ட மூளையில் ரத்தக் கசிவு காரணமாக, அவர் தொடர்ந்து சுயநினைவற்ற (கோமா) நிலையில் உள்ளார்.
அவரது சிகிச்சை, மருத்துவ செலவுகள் மற்றும் அன்றாட தேவைகளை நிர்வகிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன். இதற்காக, என் கணவரின் அசையா மற்றும் அசையும் சொத்துகள் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் என்னை அவரது சட்டப்பூர்வ பாதுகாவலராக நியமிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சச்சின் தத்தா விசாரித்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி,“மனுதாரரின் கணவர் தற்போது எந்தவித சுயாதீன முடிவுகளையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளார்.
மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், அவர் 100 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், அவரது நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்க ஒரு சட்டப்பூர்வ பாதுகாவலரை நியமிப்பது தவிர்க்க முடியாததாகிறது” எனக் குறிப்பிட்டார்.
மேலும், அந்த தம்பதியரின் இரு குழந்தைகளும், தாயை பாதுகாவலராக நியமிப்பதில் எந்தவித எதிர்ப்பும் இல்லை எனக் கூறி பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்திருந்ததை நீதிமன்றம் கவனத்தில் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து, “மருத்துவக் கோளாறு காரணமாக சுயநினைவற்ற நிலையில் உள்ள மனுதாரரின் கணவரின் நலனை கருத்தில் கொண்டு, அவரது மனைவியை சட்டப்பூர்வ பாதுகாவலராக இந்த நீதிமன்றம் நியமிக்கிறது” என நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு, குடும்பப் பொறுப்பு, மனிதாபிமானம் மற்றும் சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.